ஒரு கி.மீ. நடந்து வந்து குடிநீர் எடுக்கிறோம்: எடப்பாடியிடம் புகார் தெரிவித்த கிராம பெண்கள் 

கோவில்பட்டி: மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டியில் இன்று மாலை 6 மணியளவில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு எட்டயபுரம், எப்போதும்வென்றான், குறுக்குச்சாலை வழியாக ஓட்டப்பிடாரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இரவு 7 மணியளவில் குறுக்குச்சாலையை கடந்து வேலாயுதபுரம் கிராமம் அருகே அவரது வாகனம் வந்து கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் பெண்கள் கூட்டமாக நின்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பெண்கள் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை பார்த்தவுடன் கைகளை உயர்த்தி காண்பித்தனர்.

இதையடுத்து தனது பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு கிலோமீட்டர் தொலைவு அலைந்து தள்ளு வண்டியில் குடங்களை வைத்து தள்ளி கொண்டு வந்து தண்ணீர் பிடித்து வருவதாக தெரிவித்தனர். மேலும், அவரிடம் அந்த தண்ணீர் தள்ளுவண்டியை தள்ளச் சொல்லினர். தங்களுக்கு குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும் அதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி அந்த குடங்களுடன் இருந்த தள்ளு வண்டிகளை தள்ளி பார்த்து இவ்வளவு சிரமம் இருக்கிறதா? என மக்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அதிமுக ஆட்சி அமைந்த உடன் குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு விரைவில் காணப்படும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு கக்கரம்பட்டி, அகிலாண்டபுரம், ஆவரங்காடு, பாஞ்சாலங்குறிச்சி வழியாக ஓட்டப்பிடாரத்துக்கு சென்றார். பின்னர் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது குடிநீர் பிரச்சினைக்காக பெண்கள் தனது வாகனத்தை வழிமறித்து கோரிக்கை விடுத்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.