அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கைத் தேவை: ரஷ்யா வலியுறுத்தல்

மாஸ்கோ: அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை என்று கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை, அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கு இடையேயான போராக மாறக்கூடும் என ரஷ்ய முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவ் கூறியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இரண்டு (அணு ஆயுத) நீர்மூழ்கிக் கப்பல்களை பொருத்தமான பகுதிகளுக்கு நகர்த்த தான் உத்தரவிட்டிருப்பதாக கடந்த 1-ம் தேதி தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், “இதன் மூலம், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் போர் கடமையில் உள்ளன என்பது தெளிவாகிறது. இது ஒரு தொடர் செயல்முறை. இதுதான் முதலில் கவனிக்கத்தக்கது.

பொதுவாக இதுபோன்ற சர்ச்சைகளில் நாங்கள் ஈடுபட விரும்ப மாட்டோம். எனவே, இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க நாங்கள் விரும்ப மாட்டோம். அதேநேரத்தில், அணு ஆயுதம் குறித்துப் பேசும்போது அனைவரும் மிக மிக கவனமாகப் பேச வேண்டும்.” என தெரிவித்தார்.

ட்ரம்ப்பின் கருத்து பதற்றத்தை அதிகரித்துள்ளதாக ரஷ்யா பார்க்கிறதா என்ற கேள்விக்குப் பதில் அளித்த திமித்ரி பெஸ்கோவ், “எந்த ஒரு பதற்ற அதிகரிப்பு குறித்தும் நாங்கள் இப்போது பேசவில்லை. மிகவும் சிக்கலான, மிகவும் பதற்றம் தரும் பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. பலரும் இது குறித்து உணர்ச்சிவசப்படுகின்றனர்.” என கூறினார்.

மெத்வதேவை கிரம்ளின் எச்சரிக்க முயன்றதா என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு நாட்டிலும் தலைவர்கள் நடக்கும் நிகழ்வுகள் குறித்து வெவ்வேறு கண்ணோட்டங்களை, வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டுள்ளனர், மிக மிக கடுமையான மனநிலை கொண்ட பலர் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கிறார்கள். இது எப்போதும் இப்படித்தான்.

ஆனால், முக்கிய விஷயம் என்னவென்றால், ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கை அரசாங்கத்தின் தலைவர் அதாவது அதிபர் புதினால்தான் வகுக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்” என குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.