மும்பை,
ரெயில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ‘கவாச்’ கருவி பொருத்தப்படுகிறது. ‘கவாச்’ கருவி என்பது ரெயில்களில் பாதுகாப்பு அம்சத்தை திறன்பட மேற்கொள்ள இந்திய ரெயில்வேயால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கருவியாகும். தானியங்கி கருவியான ‘கவாச்’ இந்திய ரெயில்களில் ஏற்படும் விபத்துகளை முன்கூட்டியே அறிந்து தடுக்கும் திறன் கொண்டது. தற்போது இந்த தொழில்நுட்பம் பெரும்பாலும் நீண்ட தூர ரெயில்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ‘கவாச்’ கருவி பொருத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:-
‘கவாச்’ கருவியை பொருத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் மேற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் ‘கவாச்’ கருவி பொருத்தப்படும். இந்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பு மேம்பாடு, விபத்து தடுப்பில் முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.