நியூயார்க்,
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் வகையிலான நடவடிக்கையை எடுப்பேன் என தெரிவித்த அவர், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி உத்தரவிட்டார்.
பிரேசில் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில், கையெழுத்திட்டார். இதுபற்றிய அந்த உத்தரவில், பிரேசில் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், அமெரிக்க வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது. அமெரிக்க குடிமக்களின் சுதந்திர பேச்சுரிமையையும் அது பாதித்து உள்ளது. அமெரிக்க வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார நலன்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவிக்கின்றது.
இதேபோன்று, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு மற்றும் கூடுதல் அபராதம் ஆகியவற்றை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
அது ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது என முதலில் தெரிவிக்கப்பட்டது. இது பின்னர் 7-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவர், மருந்து பொருட்களுக்கான வரி விதிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று கூறும்போது, இந்தியா அதிக வரி விதிக்கும் நாடாக உள்ளது. நம் மீது, வேறு யாரையும் விட மிக அதிக வரியை இந்தியா விதிக்கிறது. அவர்களுடைய வரி அதிகம் என்பதனால், நாம் மிக மிக சிறிய அளவிலேயே அவர்களுடன் வர்த்தகம் செய்கிறோம்.
ஒரு நல்ல வர்த்தக உறவுக்கான நாடாக இந்தியா இருக்கவில்லை. அதனால், நாம் அவர்களுக்கு 25 சதவீத வரி விதித்திருக்கிறோம். அவர்கள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்குகிறார்கள். இதனால், அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது பெரிய அளவில் வரி விதிக்கலாம் என நான் நினைக்கிறேன் என சி.என்.பி.சி. செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.