அதிர்ச்சி சம்பவம்: குட்கா கொடுக்க மறுத்ததால்.. நண்பரை கொலை செய்த தொழிலாளி

வர்த்தூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ராமகொண்டனஹள்ளி பகுதியில் தனியார் பள்ளிக்கூட கட்டிட பணிகள் நடந்து வந்தது. இந்த பணியில் பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்களான ஹிதேந்திரா பாண்டே, சீதாராம் பாண்டே ஆகியோர் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

விஜயாப்புராவில் வேலை பார்த்து வந்த நண்பர் ஹிதேந்திராவை சீதாராம் பெங்களூருவுக்கு அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்து வேலைக்கு அழைத்து சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி ஹிதேந்திரா, சீதாராம் ஆகியோர் வீட்டில் வைத்து மது குடித்துள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சீதாராம், வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து ஹிதேந்திராவை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சீதாராம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து வர்த்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீதாராமை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சீதாராமை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, சம்பவத்தன்று மது குடிக்கும்போது ஹிதேந்திரா, சீதாராமிடம் விமலா எனப்படும் குட்கா பாக்கை கேட்டுள்ளாா். இதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் குடிபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சீதாராம், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து ஹிதேந்திராவை சரமாரியாக தாக்கி கொன்றது தெரியவந்தது. கைதான சீதாராமிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.