புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.
இதனால், இரு நாடுகள் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. எனினும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடரும் என இந்தியா தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை இந்திய படைகள் தீவிரப்படுத்தி உள்ளன.
இந்த சூழலில், எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கான பாகிஸ்தானின் ஆதரவு தொடர்ந்து வரும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இந்தியா சமீபத்தில் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், அழிக்கப்பட்ட உட்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியமைப்பதற்காக பெரிய பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நாடு நிதியுதவி அளித்துள்ளது என புதிய உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில், கடைசியாக 90 நாட்களில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் பிற அரசு அமைப்புகளால் பயங்கரவாத கட்டமைப்புகள் எழுப்பப்பட்டு உள்ளன.
இதுதவிர, இந்திய படைகள் கண்டறிய முடியாத அளவுக்கு பயங்கரவாதிகள், புதிய முறைகளை பயன்படுத்தியும் மற்றும் நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடனும் இந்திய படைகளின் கண்காணிப்பில் இருந்து தப்பி வருகின்றனர் என தகவல் தெரிவிக்கின்றது.
ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என இந்தியா கூறி வரும் சூழலில், படைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிய கூடாரங்களை அமைத்து அதிக அளவிலான பயங்கரவாதிகளை அதில் தங்க வைக்கின்றனர். சிறிய முகாம்களில் பயங்கரவாதிகளை தங்க வைக்கும்போது, பெரிய அளவில் உயிரிழப்புகள் இருக்காது என்பதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதேபோன்று, கேடயம் போல் பயன்படுத்துவதற்காக முகாம்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிக அளவில் கொண்டு வருகின்றனர்.
அடர்ந்த வன பகுதிகளில், செயற்கைக்கோள் வழியே அறிய முடியாத வகையில், ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் மற்றும் பிற நவீன உபகரணங்கள் உதவியுடன் அவர்கள் செயல்படுகின்றனர். புதிய ஆயுதங்களை கொள்முதல் செய்வது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆள்சேர்ப்புக்கான முயற்சிகளிலும் பயங்கரவாதிகள் ஈடுபடுகின்றனர்.
இந்தியாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு அந்நாட்டு மதிப்பின்படி, 100 கோடி ரூபாயை நிதியுதவியாக அளித்துள்ளது என்றும் உளவு தகவல் தெரிவிக்கின்றது. எனினும், இந்திய படைகளின் தீவிர பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையால், புதிய பயங்கரவாதிகளின் ஆள்சேர்ப்பில் பெருமளவில் சரிவு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.