Rishabh Pant helped a poor student: இந்திய அணியின் அதிரடி வீரரும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் ஏழை மாணவிக்கு கல்லூரி படிக்க உதவி செய்துள்ளார். ரிஷப் பண்ட்டின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தின் பிலாகி தாலுகாவில் உள்ள ரபகாவி கிராமத்தில் வசித்து வருபவர் ஜோதி. இவர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 83 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார். தொடர்ந்து உயர்கல்வியிலும் சாதிக்க நினைத்த ஜோதிக்கு பணம் ஒரு பிரச்சனையாக இருந்துள்ளது. ஜோதியின் தந்தை தீர்த்தய்யா, கிராமத்தில் ஒரு சிறிய டீ கடை நடத்தி வருகிறார். அவர் ஜம்கண்டியில் உள்ள பி.எல்.டி.இ கல்லூரியில் கணிணி பயன்பாடுகள் இளங்கலை (BCA) படிப்புக்கான சோர்க்கை கட்டணமாக ரூ. 40,000 சொலுத்த முடியாமல் இருந்துள்ளது.
ரிஷப் பண்ட் உதவிகரம்
இந்த சூழலில் ஜோதி, அதே கிராமத்தை சேர்ந்த உள்ளூர் ஒப்பந்ததாரான அனில் ஹுனாஷிகட்டி என்பவரிடம், உதவி கேட்டுள்ளார். அவரும் நிதி உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில், அனில் ஹுனாஷிகட்டி இந்த விஷயத்தை பெங்களூருவில் இருக்கும் தனது நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார். அப்போது அவர்களுள் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு நெருக்கமாக இருந்த நிலையில், ஜோதியின் ஏழ்மையை ரிஷப் பண்ட்டிடம் தெரிவித்தார். ஜோதியின் சூழ்நிலையை புரிந்துகொண்ட ரிஷப் பண்ட், ஜூலை 17ஆம் தேதி அன்று ஜோதியின் முதல் செமஸ்டர் கட்டணத்தை நேரடியாக கல்லூரியின் வங்கி கணக்கிற்கு ரூ. 40,000 செலுத்தினார்.
மாணவி நன்றி கடிதம்
கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் இந்த செயலை கண்டு வியந்துபோன ஜோதி, அவருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், முதல் செமஸ்டர் சேர்க்கை கட்டணத்தை நீங்களே செலுத்தியதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பின்தங்கிய மாணவர்களுக்கு உங்கள் ஆதரவு தொடரும் என்று நாங்கள் மனதார நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார். ரிஷப் பண்ட்டின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
காயத்தில் இருந்து மீண்டு வரும் ரிஷப்
ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரை அடுத்து இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடினார். 4 போட்டிகளில் விளையாடிய அவருக்கு மான்செஸ்டர் மைதானத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியின்போது, வலது காலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு எழும்பு முறிவு ஏற்பட்டதால், 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். ரிஷப் பண்ட் இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 7 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 479 ரன்கள் அடித்தார். இதில் 2 சதம் மற்றும் 3 அரைசதங்களும் அடங்கும்.
மேலும் படிங்க: ஏ.பி.டி வில்லியர்ஸ் ஆல்டைம் ஐபிஎல் பிளேயிங் லெவன்: 2 சிஎஸ்கே வீரர்கள்தானா.. ஆனால்?
மேலும் படிங்க: ‘பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம்’.. பென் ஸ்டோக்ஸை எச்சரித்த அஸ்வின்!