புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணி உறுதியாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் தங்களின் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணி உறுதியாக உள்ளது.
மக்களின் வாக்குரிமை திருடப்படக்கூடாது என்பதை சபாநாயகர், மாநிலங்களவை துணைத் தலைவர் மற்றும் அரசாங்கத்துக்கு நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். சிறப்பு தீவிர திருத்தம் வாக்குரிமையை திருடுகிறது” என தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமான அரசியல் சாசன அமைப்பு என்பதால் அதன் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவைத் துணைத் தலைவரும் கூறுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மல்லிகார்ஜுன கார்கே, “சூரியனுக்கு கீழ் உள்ள அனைத்தும் குறித்தும் விவாதிக்க முடியும். எனவே, சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். அவர்கள் தனிநபர்களின் குடியுரிமையை சந்தேகிக்க முயல்கிறார்கள்.
விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறும் எங்கள் போராட்டம் தொடரும். வரும் 11ம் தேதி இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி இண்டியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்படும்.” என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் கூட்டத்தில், இண்டியா கூட்டணியை சேர்ந்த திமுக, திரிணமூல் காங்கிரஸ், சிபிஐ(எம்), சிவ சேனா (யுபிடி) உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி டெல்லியில் இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் கலந்து கொண்டனர்.