Asia Cup, Indian Cricket Team schedule : இரண்டு தொடர்ச்சியான ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய அணி, தற்போது செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) தொடங்கும் ஆசிய கோப்பை 2025-க்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. முதலில் இந்தியாவில்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், தடையின்றி போட்டிகள் நடைபெற, தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை ஒருநாள் போட்டி வடிவில் நடைபெற்ற இப்போட்டி, இந்த முறை T20 வடிவில் நடைபெற உள்ளது.
மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்று இருப்பதால், அவர்கள் இல்லாமல் இந்ததொடரை விளையாடுவது இந்தியாவுக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்கும். இந்த முறை அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களுடன், இந்திய அணி களமிறங்க உள்ளது.
இருப்பினும், இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டு தொடக்கத்தில் செய்த குடலிறக்க அறுவை சிகிச்சை காரணமாக அவர் அணிக்கு திரும்புவது இன்னும் உறுதியாகவில்லை. அவர் கடந்த மாதம் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு திரும்பியிருந்தாலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்னும் அவரை போட்டிகளில் விளையாடத் தகுதியானவர் என்று அறிவிக்கவில்லை. மேலும், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இந்தப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போதுதான் எந்தெந்த பிளேயர்கள் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் போட்டி விவரங்கள்
– இந்தியா குரூப் A-வில் இடம்பெற்றுள்ளது, இதில் பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் உள்ளன.
– இந்தியா தனது முதல் போட்டியை செப்டம்பர் 10 (புதன்கிழமை) அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக துபாயில் தொடங்குகிறது.
– மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம எதிரிகளான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி செப்டம்பர் 14 (ஞாயிற்றுக்கிழமை) அன்று துபாயில் நடைபெற உள்ளது.
– இந்தியாவின் அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு தொடங்கும்.
– இந்தியாவின் போட்டிகளுக்கான டாஸ் மாலை 7 மணிக்கு போடப்படும்.
ஆசிய கோப்பை 2025: நேரலை ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்கள்
தொலைக்காட்சி: இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Sony Sports Network) அனைத்து ஆசிய கோப்பை 2025 போட்டிகளையும் நேரலை ஒளிபரப்பு செய்யும்.
நேரலை ஸ்ட்ரீமிங்: சோனிலிவ் (SonyLIV) செயலி மற்றும் அதன் இணையதளம் மூலமாக அனைத்துப் போட்டிகளையும் இந்தியாவில் நேரலையாகப் பார்க்கலாம்.
ஆசிய கோப்பை 2025 செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
மேலும் படிக்க | ரோகித் வேண்டாம்.. இந்த வீரரை ODI கேப்டன் ஆக்குங்க! பெருகும் ஆதரவு
மேலும் படிக்க | இந்திய அணி அடுத்து விளையாடப்போகும் போட்டிகளின் தேதி – முழு விவரம்..!!