கேப்டவுன்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இதுவரை 18 சீசன்களை கடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. கடைசியாக நடந்த தொடரில் ஆர்.சி.பி அணி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடியுள்ள வீரர்களை வைத்து ஆல்டைம் பெஸ்ட் ஐ.பி.எல் பிளேயிங் லெவனையும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரரான டி வில்லியர்ஸ் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
இதில் தொடக்க வீரர்களாக மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் துவக்க வீரரான மேத்யூ ஹைடன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.
நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவையும், 5வது இடத்தில் தன்னையும் தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து 6வது இடத்தில் மும்பை அணியின் தற்போதைய கேப்டன் ஹார்திக் பாண்டியாவையும், 7வது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்து அவருக்கு கேப்டன் பதவியையும் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து 8 முதல் 11 இடங்கள் வரை முறையே பும்ரா, மலிங்கா, சாஹல், டேனியல் வெட்டோரியை தேர்வு செய்துள்ளார். டி வில்லியர்ஸ் தேர்வு செய்த அணி விவரம்:
ரோகித் சர்மா, மேத்யூ ஹைடன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், டி வில்லியர்ஸ், ஹர்திக் பாண்ட்யா, டி வில்லியர்ஸ், மகேந்திர சிங் தோனி, ஜஸ்ப்ரீத் பும்ரா, லசித் மலிங்கா, யுஸ்வேந்திர சாஹல், டேனியல் வெட்டோரி.