லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் குழுவை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அனுப்பி வைத்தார்.
அதன்படி கான்பூர் தேஹா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும், நிவாரணம் வழங்கவும் மாநில மீன்வளத்துறை மந்திரி சஞ்சய் நிஷாத் சென்றார். அங்கு அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை செய்தார்.
அப்போது அவர் ஒரு பெண்ணிடம், கங்கை நதி உங்கள் கால்களை சுத்தம் செய்ய உங்கள் வீட்டுக்கே வந்துவிட்டது. கங்கை ஆசி கூற வந்துள்ளது. அதனை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று கூறினார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையானது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியது.
இதனிடையே மந்திரி சஞ்சய் நிஷாந்தின் சர்ச்சை பேச்சுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷர்வேந்திர பிக்ரம் சிங், இது மந்திரியின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என்றார்.
மந்திரி சஞ்சய் நிஷாந்த் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அஜய் ராய், “பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவந்த இடத்தில் இப்படியா பேசுவது. உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள் என்று பிரசாரம் செய்யும் மந்திரிகள், வெளிநாட்டு சொகுசு காரில் வலம் வருகிறார்கள். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்” என்றார்.
தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து மந்திரி சஞ்சய் நிஷாந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நான் சாதாரணமாக பேசியது திசை திருப்பப்பட்டுள்ளது. நாங்கள் கங்கையை புனிதமாக கருதுவோம். அதற்காக நீண்ட தொலைவில் இருந்து கங்கையில் புனித நீராட செல்வோம். அப்படிப்பட்ட கங்கை வீட்டுக்கே வந்துள்ளது என்று சாதாரணமாகதான் கூறினேன்.
சில தினங்களுக்கு முன்பு பிரயாக்ராஜில் தனது வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீரை போலீஸ்காரர் ஒருவர் வணங்கி, அதில் நீராடியதை பார்த்தோம். அதன் அடிப்படையில்தான் கூறினேன் என்றார். தற்போது இந்த விவகாரம் உத்தர பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.