மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் ‘டோர் டெலிவரி’ – ஆக.12-ல் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் உள்ள வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை சென்னையில் வரும் ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடு தேடிச் சென்றடையச் செய்யும் தமிழக அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆக.12-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மின்னணு எடைத்தராசு, விற்பனை முனைய இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்துக்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

எழுபது வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.

முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.