அபுதாபி,
ஐக்கிய அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இன்று (வியாழக்கிழமை) ரஷியாவுக்கு 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக செல்கிறார். அப்போது அவர் ரஷியா அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து பேசுகிறார். இது குறித்து அமீரக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நட்புறவு இருந்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வருகிறது.
ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இன்று (வியாழக்கிழமை) ரஷியாவுக்கு 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசுவர். மேலும் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேச இருக்கின்றனர்.
கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷியாவில் நடந்தது. இந்த மாநாட்டில் அமீரக அதிபர் முதல் முறையாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
அப்போது ரஷிய அதிபர், ரஷியா-உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றத்திற்கு மத்தியஸ்தம் செய்வதற்கான முயற்சிகளை அமீரகம் மேற்கொண்டு வருவதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த பயணத்தின் போது அமீரக அதிபர் மாஸ்கோவில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஷேக்கா பாத்திமா பிந்த் முபாரக் கல்வி மையத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் அமீரகம், ரஷியா ஆகிய இரு நாடுகளும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. இதன் காரணமாக எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு பற்றி முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் அமீரக, ரஷிய அதிபர்கள் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்து பேசினர். அதன் பின்னர் அபுதாபி பட்டத்து இளவரசரும், நிர்வாகக்குழு தலைவருமான மேதகு ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பெலாரஸ் நாட்டில் நடந்த உச்சிமாநாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.