வரலட்சுமி விரதம்: தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

ஆடி மாதம் அம்மன் மாதம். அந்த வகையில் ஆடிமாதத்தில் தென் மாநிலங்களில் பெரிதும் போற்றப்படும் வழிபாடு வரலட்சுமி பூஜை அல்லது வரமஹாலட்சுமி பூஜை. இந்த நோன்பைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்வில் செல்வம், ஆரோக்கியம் மற்றும் தீர்க்க சுமங்கலி வரம் முதலிய சகல நலன்களும் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமைகளில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (8.8.2025) வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வருகிறது. இந்த விரதத்தில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய 10 விஷயங்களை இங்கு காண்போம்.

வரலட்சுமி பூஜை

1. பொதுவாக வரலட்சுமிதேவியை கலசத்தில் ஆவாஹனம் செய்து வழிபடுவது ஒரு வழக்கம். கலசத்தில் அரிசி, பருப்பு, மஞ்சள், காசுகள் ஆகியன சேர்த்து மேலே மாவிலை, தேங்காய், ஆகியன வைத்துத் தயார் செய்ய வேண்டும். சிலர் ஜாதிக்காய், மாசிக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய பொருள்களையும் சேர்ப்பார்கள். கண் மை டப்பியையும் போட்டு வைக்கும் வழக்கம் உண்டு. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த மையைக் கொடுத்து திலகமிடச் செய்வது விசேஷம். அத்துடன் கட்டாயம் காதோலை கருகமணி சமர்ப்பிக்க கலசத்தின் இரு பக்கமும் தொங்கும்படி அதை மாட்டிவிட வேண்டும். வெள்ளிமுகம் இருப்பவர்கள் அதைக் கலசத்தில் பொருத்தலாம்.

2. மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8-9 மணிக்குள் அம்மனை அழைக்க வேண்டும். வாசலில் மாக்கோலம் இட்டு அலங்காரம் செய்த அம்மனை அங்கு கொண்டுவர வேண்டும். அங்கிருந்து இரண்டு சுமங்கலிகள் அம்மனுக்கு தாம்பூலம் சமர்ப்பித்து தீபாராதனை காட்டி அதன்பின் பூஜை செய்யும் இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இரண்டு சுமங்கலிகள் இல்லாத பட்சத்தில், கணவன்-மனைவி இருவருமாக சேர்ந்து எடுத்து வைக்கலாம். அப்படி அழைக்கும்போது மங்கலப் பாடல்களைப் பாடி அழைக்க வேண்டும். இப்போது இணையத்தில் வரலட்சுமி நோன்பு பாடல்கள் கிடைக்கின்றன. அவற்றை ஒலிக்க விடலாம். மொத்தத்தில் அம்மனை அழைக்கும் அந்த பக்தி பாவனைதான் முக்கியம்.

3 அம்மனை எழுந்தருளச் செய்ய அலங்கரிக்கப்பட்ட மண்டபங்களைத் தயார் செய்வார்கள். தற்போது, எல்லா இடங்களிலும் சிறியளவிலான ரெடிமேட் பூஜா மண்டபங்கள் கிடைக்கின்றன. ஆனாலும், பெரும்பாலான வீடுகளில் மர ஸ்டூல் ஒன்றையே மண்டபமாக்கி விடுவார்கள். மர ஸ்டூலை முதல்நாளே நன்றாகக் கழுவி காயவைத்து எடுத்து இதன் நான்கு கால்களிலும் மாவிலை கட்டி மாலைகளால் அழகாக அலங்கரிக்க வேண்டும்.

4. பூஜையைத் தொடங்கும் முன்பு கைகளில் கட்டிக்கொள்ளும் தோரணங்களை (மஞ்சள் சரடு) அம்மன் மீது அலங்காரமாக சாத்த வேண்டும். நம் வீட்டில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கையோடு ஒருசில சரடுகள் சேர்த்து வைக்க வேண்டும். இந்த சரடுகளில் ஒன்பது முடிச்சுகள் போட வேண்டும். பூஜையின் முடிவில் அந்த முடிச்சிகள் ஒவ்வொன்றுக்கும் பூஜை செய்து பின் கைகளில் கட்டிக்கொள்ள வேண்டும்.

5. அம்மனை அழைத்து அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் எழுந்தருளச் செய்த பின்பு பூஜையைத் தொடங்க வேண்டும். பூஜைக்கு வாசனை மலர்களைப் பயன்படுத்துவதே உகந்தது. முதலில் மஞ்சள் பிள்ளையார் பிடித்துப் பூஜை செய்ய வேண்டும். பிள்ளையார் பூஜை முடித்து பின் அவரை வடக்கு நோக்கி நகர்த்தியபின்

‘பத்மாஸநே, பத்மகராம் ஸர்வலோக பூஜிதே நாராயணப்ரியே தேவி ஸுப்ரி தாப்பவ ஸர்வதா’ என்று பிரார்த்தித்துப் பூஜை செய்ய வேண்டும்.

6. பூஜையில் வில்வம் சேர்க்க வேண்டியது அவசியம். திருமகளுக்கு விசேஷமான பத்ரம் வில்வம்தான். வில்வ மரங்கள் லட்சுமி அம்சம் கொண்டவை. வில்வ இலைகளைப் பயன்படுத்திப் பூஜை செய்தால், எப்பிறவியிலும் வறுமை நம்மை அண்டாது. திருமகளை ‘ஶ்ரீபில்வ நிலயாயை நம:’ என்று போற்றித் துதிப்பார்கள் (பில்வம் -வில்வம் ).

7. அம்மனுக்கு நம் வீட்டில் தயாரிக்கும் எளிய உணவை நிவேதனம் செய்தாலே அவள் ப்ரீதி அடைவாள். என்றாலும் யாராரெல்லாம் விஸ்தாரமாக நிவேதனங்கள் தயார் செய்து வழிபட முடியுமோ அவர்கள் பச்சரிசி இட்லி, சுத்த அன்னம், பருப்பிட்ட குழம்பு, ரசம், மோர்க் குழம்பு, துணைக்கறி வகைகள், வடை, சர்க்கரைப்பொங்கல், பாசிப்பருப்பு பாயசம், வெள்ளரி, தேங்காய், பச்சைமிளகாய் உப்பு சேர்த்து அரைத்த பச்சடி, எள்ளு பூரணம், காரக் கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்திய பதார்த்தங்களாகப் படைக்கவேண்டும். இட்லி, கொழுக்கட்டை போன்றவற்றை 9 என்ற எண்ணிக்கையில் படைக்கவேண்டும். வடை வகையறாக்களில் கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு வடைகள் பிரசித்தம்.

8. பூஜை முடிந்து சரடி கட்டிக்கொள்ளும் முன்பாக வரலட்சுமி விரத மகிமையைப் படிப்பதும், விரதக் கதையைக் கேட்பதும் விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். சரடு கட்டி விடுவது வீட்டில் மூத்த சுமங்கலியாகவோ கணவராகவோ இருக்க வேண்டும். பொதுவாகப் பெண்கள் மட்டுமே சரடு கட்டிக்கொள்வார்கள்.

மகாலட்சுமி

9. அம்மனுக்கு சாத்திய சரடுகளுக்குப் பூஜை செய்து பின் கட்டிக்கொள்ள வேண்டும். சரடின் ஒவ்வொரு முடிச்சிலும் மலர்கள் தூவி பூஜை செய்ய வேண்டும்.

ஓம் கமலாயை நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி

ஓம் ரமாயை நம: த்வீதீய க்ரந்திம் பூஜயாமி

ஓம் லோக மாத்ரே நம: த்ருதீய க்ரந்திம் பூஜயாமி

ஓம் விச்வ ஜநந்யை நம: சத

ஓம் மகாலட்சுமியை நம: பஞ்சம க்ரந்திம் பூஜயாமி

ஓம் ட்ஷீராப்தி தநாயயை நம: ஷஷ்ட க்ரந்திம் பூஜயாமி

ஓம் விவ்வஸாட்ஷிண்யை நம: ஸப்தம க்ரந்திம் பூஜயாமி

ஓம் சந்த்ரஸோதர்யை நம: அஷ்டம க்ரந்திம் பூஜயாமி

ஓம் ஹரிவல்லபாயை நம: நவம க்ரந்திம் பூஜயாமி

என்று 9 முடிச்சையும் பூஜை செய்ய வேண்டும். அதாவது நவசக்திகளையும் அந்தக் கயிற்றில் எழுந்தருள வேண்டிப் பூஜை செய்ய வேண்டும்.

10 உறவினர்களின் மரணம் காரணமாக ஓர் ஆண்டு பண்டிகைகள் கடைப்பிடிக்க முடியாதவர்கள் பக்கத்து வீடுகளில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு வழிபடலாம். குறிப்பிட்ட நாளில் பூஜை செய்ய முடியாதவர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை இதே பூஜையைச் செய்யலாம். இதில் முக்கியமானது சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்குத் தாம்பூலம் தருவது. அந்த நாளில் நம் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்கள், கன்னிப் பெண்கள், சிறுமிகள் அனைவரையும் தேவியின் அம்சமாகவே பாவித்து நலுங்கிட்டு வணங்கி அவர்களுக்கு உண்ண உணவு தந்து பின் தாம்பூலம் தந்து அனுப்பிவைப்பது அவசியம். சனிக்கிழமை காலை புனர்பூஜை செய்து (நிவேதனம், கற்பூரம் காட்டி வழிபட்டு) பின் கலசத்தை நகர்த்தி வைத்துப் பூஜையை முடிக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.