National Awards: "தேசிய விருதுகளை இப்படி தான் தேர்வு செய்வாங்க!" – விரிவாக விளக்கும் ஜூரி

71-வது தேசிய விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழில் ‘பார்கிங்’ திரைப்படத்திற்கு மொத்தமாக மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

இதைத் தாண்டி, ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த பாடல்களுக்கான தேசிய விருதும் வந்துள்ளது.

Parking
Parking

தேசிய விருது தொடர்பாக பலருக்கு பல சந்தேகங்கள் உள்ளன. தேசிய விருதுக்கு ஒரு படத்தை எப்படி தேர்வு செய்கிறார்கள்? திரையரங்குகள், ஓடிடி என எங்கும் ரிலீஸாகாத திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்குமா? ஜூரிகளை எப்படி தேர்வு செய்கிறார்கள்? என தேசிய விருதைச் சுற்றி பலருக்கு பல சந்தேகங்கள் உள்ளன.

இந்த வருடத்தின் தேசிய விருதுகளின் ஜூரிகளில் ஒருவராக தமிழகத்திலிருந்து இயக்குநர் கௌரவ் நாராயணன் சென்றிருக்கிறார்.

விமலின் ‘தூங்கா நகரம்’, விக்ரம் பிரபுவின் ‘சிகரம் தொடு’, உதயநிதி ஸ்டாலினின் ‘இப்படை வெல்லும்’ போன்ற படங்களை இயக்கியவர் இவர்.

தேசிய விருது பற்றிய பல சந்தேகங்களையும், அவருடைய இந்தாண்டு ஜூரி அனுபவத்தையும் கேட்டறிந்தேன்.

வாழ்த்துகள் சொல்லி பேசத் தொடங்கியதும், “ரொம்பவே நன்றிங்க!” என்றவர், “நான்தான் இந்த வருடத்தின் ஜூரிகளில் ரொம்ப இளமையானவன். கடந்த இரண்டு தசாப்தங்களில் தேசிய விருதின் ‘Youngest Jury’ நான்தான்னு சொல்லலாம்!” என்றார்.

மேலும், “தேசிய விருதுக்கு எப்போதுமே அப்ளை செய்வதுதான் முறை. தேசிய விருது பற்றிய அறிவிப்பு வந்தவுடனே இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும்போது, படத்தை எப்படி சப்மிட் செய்ய வேண்டும், அதில் இருக்க வேண்டிய சப்டைட்டில் மாதிரியான விஷயங்களை எப்படி அமைக்க வேண்டும், அதன் ஃபான்ட் எப்படி இருக்க வேண்டும் என தெளிவான விளக்கங்களைக் கொடுத்திடுவாங்க.

71 தேசிய விருதுகள்
71 தேசிய விருதுகள்

அதை வைத்துதான் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தேசிய விருதுக்கு விண்ணப்பிப்பார்கள். இந்த வருடம் 2023-ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில், ஓடிடி-யில் வெளியான திரைப்படங்களை மட்டும்தான் தேசிய விருதுக்கு அனுப்ப வேண்டும் என்பது கிடையாது.

அந்த வருடத்தில் ஒரு திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு தணிக்கைச் சான்றிதழ் பெற்றிருந்தால், தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

திரைப்படம் ரிலீஸ் ஆகும் வருடத்தை வைத்து தேசிய விருது கொடுக்க மாட்டார்கள். அது எந்த வருடம் சான்றிதழ் வாங்கி விண்ணப்பிக்கப்பட்டதோ, அந்த வருடத்தைதான் தேசிய விருதுக்கு கணக்கிடுவார்கள்.

தேசிய விருதுக்கு எத்தனை திரைப்படங்களை வேண்டுமானாலும் சப்மிட் செய்யலாம். ஒரு திரைப்படம் எப்படியான படமாக இருந்தாலும் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை.

ஆனால், விண்ணப்பிக்கும் முறையில் கவனமாக இருப்பது முக்கியம். ஒருவேளை, விண்ணப்பிக்கும் முறையில் ஏதேனும் கோளாறுகள் இருந்தால், தேசிய விருது குழு அவர்கள் குறிப்பிட்ட விவரத்தை வைத்து அவர்களைத் தொடர்பு கொண்டு, முறையாக குறிப்பிட்ட தேதியில் கோளாறுகளைச் சரி செய்து பதிவேற்றச் சொல்வார்கள்.

அவர்கள் சொன்ன தேதியில் அதைச் சரி செய்யவில்லை என்றால் மட்டுமே திரைப்படம் வெளியேற்றப்படும்.

ஆனால், ஒரு திரைப்படம் வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க, தேசிய விருது குழு கவனமாக இருந்து பல முன்னெச்சரிக்கைகளையும் எடுப்பார்கள். இந்த வருடம் 340-க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அத்தனை படங்களையும் ஜூரி பார்த்துதான் வெற்றியாளர்களை முடிவு செய்வார்கள். இதையும் தாண்டி, இன்னொரு குழு ஜூரிகளைத் தேர்வு செய்யும்.

சொல்லப்போனால், அடுத்த வருடம் வெற்றியாளர்களை அறிவிக்க, இப்போதே வேலைகளைத் தொடங்கியிருப்பார்கள்.

தேசிய விருதுக்கு ஜூரியாகச் செல்வதற்கு விண்ணப்பிக்க முடியாது. தேசிய விருது குழுவிலிருந்துதான் ஜூரிகளைத் தேர்வு செய்வார்கள். ஒருவர் எப்படியான படங்களைச் செய்திருக்கிறார்? அவருடைய படம் சமூகத்தில் எப்படியான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது? அவர் இந்தப் பொறுப்புக்கு தகுதியானவரா? என அனைத்தையும் பார்த்துதான் ஜூரிகளைத் தேர்வு செய்வார்கள்.

ஜூரிகளை அவர்களாகவே தேர்வு செய்து அழைப்பார்கள். இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது! தேசிய விருதுக்கு அனுப்பப்பட்ட திரைப்படங்களுக்கும் உங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கக் கூடாது.

அந்தப் படங்களில் உங்களுக்கு நன்றி கூட குறிப்பிடப்பட்டிருக்கக் கூடாது. என்னைத் தேர்வு செய்ததற்கான காரணத்தையும் அவர்கள் சொன்னார்கள்.

தேசிய விருதுக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்பது எனக்கே அப்போதுதான் தெரிந்தது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “நான் இன்னும் தமிழில் இருந்து அதிக திரைப்படங்கள் தேசிய விருதுக்கு வர வேண்டும் என்று ரொம்பவே விரும்புகிறேன்.

ஒரு வருடத்துக்கு 250 திரைப்படங்கள் வெளியாகின்றன என்றால், அதில் இருந்து குறைந்தபட்சம் 50 சதவீத திரைப்படங்களாவது தேசிய விருதுக்கு வர வேண்டும் என்பதுதான் என் ஆசை,” என முடித்துக் கொண்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.