வாஷிங்டன்: இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வரி அமெரிக்காவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும் அதிபர் ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பருமான ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.
இந்தியா அதிக வரி விகிதத்தைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப் போவதாகக் கூறி வந்தார். இந்நிலையில், இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்த ட்ரம்ப், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25% வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். இதன்மூலம், அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி பொருட்களுக்கான வரி விகிதம் 50% ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், சீனா மீது விதிக்கப்பட்டிருந்த அதிகப்படியான வரியை குறைத்த ட்ரம்ப் நிர்வாகம், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளையும்கூட குறைத்தது.
இந்நிலையில், டொனால்டு ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளை ஜான் போல்டன் கடுமையாக விமர்சித்துள்ளார். சிஎன்என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்தியா மீது அதிபர் டொனால்ட் விதித்த வரிகள், அமெரிக்காவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. சீனா மீது ட்ரம்ப் கருணை காட்டியுள்ளார். அதேநேரத்தில், இந்தியா மீதான வரிகளை கடுமையாக்கியுள்ளார். இதன்மூலம், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இலக்கு சீனாதான். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் இலக்கை பலவீனப்படுத்தி உள்ளது. இந்தியாவை விட சீனாவை ட்ரம்ப் ஆதரிக்கிறார். இது ஒரு மிகப்பெரிய தவறு. ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து இந்தியாவை விலக்க பல பத்தாண்டுகளாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் தற்போது ஆபத்தில் உள்ளன. ரஷ்யாவை காயப்படுத்தும் நோக்கில் இந்தியா மீது விதிக்கப்பட்ட இரண்டாவது 25% வரி, இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக்கும். உக்ரைன் விஷயத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த இது வழிவகுக்கும்.” என தெரிவித்துள்ளார்.
மேலும், தி ஹில் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், “சீனா மீதான ட்ரம்ப்பின் மென்மையான நிலைப்பாடு, சீனா உடனான ஒப்பந்தத்தில் காட்டப்படும் ஆர்வம் ஆகியவை அமெரிக்க மூலோபாய நலன்களை தியாகம் செய்வதாகக் கருதப்படலாம்.
இந்தியா மீது விதிக்கப்பட்டதை விட, சீனா மீது விதிக்கப்பட்ட வரி விகிதம் குறைவு என்பது ட்ரம்ப்பின் மிகப்பெரிய தவறாக இருக்கும். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியாவை வற்புறுத்த ட்ரம்ப் நிர்வாகம் தவறிவிட்டது. அதேநேரத்தில், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு “நியாயமற்றது மற்றும் ஏற்க முடியாதது” என்று கூறி இந்தியா தனது நிலையை பாதுகாத்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சட்டவிரோத வர்த்தக அழுத்தத்தைக் கொடுப்பதாக ரஷ்யாவும் குற்றம் சாட்டியுள்ளது. ட்ரம்ப் உடன் புதின் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், அவர் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வரி விகிதத்தை தனது பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக பயன்படுத்தலாம்.” என்று தெரிவித்துள்ளார்.