இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசனில் சென்னை அணி வரலாற்று தோல்விகளை சந்தித்தது. இந்நிலையில் இதனை சரி செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முற்றிலுமாக மறுகட்டமைப்பு செய்யும் பணிகளில் அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் முக்கிய பகுதியாக, அணியின் மூத்த வீரர் எம்.எஸ். தோனி மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தற்போது சென்னையில் முகாமிட்டு, ஐபிஎல் 2026-க்கான திட்டங்கள் மற்றும் வியூகங்கள் குறித்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திடீர் சந்திப்பு, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
சென்னையில் நடக்கும் ஆலோசனைகள்
தற்போது ஐபிஎல் போட்டிகள் இல்லாத ஓய்வு காலம் என்றாலும், அடுத்த ஆண்டுக்கான ஏலம் நெருங்கி வருவதால், அணிகள் தற்போதே திட்டமிடலை தொடங்கிவிட்டன. அந்த வகையில், சிஎஸ்கே அணி முன்கூட்டியே தனது பணிகளை தொடங்கியுள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்கே-வின் உயர் செயல்திறன் மையத்தில் (High-Performance Centre) தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன், அணியின் முன்னாள் கேப்டன் ‘தல’ தோனியும் இணைந்து, நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் மூத்த வீரர்களுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டங்களின் முக்கிய நோக்கம், கடந்த சீசனின் தோல்விகளை ஆராய்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான ஒரு வலிமையான அணியை உருவாக்குவததே ஆகும்.
தோல்வியில் முடிந்த 2025 சீசன்
சிஎஸ்கே அணிக்கு 2025 ஐபிஎல் சீசன் ஒரு மோசமான கனவாகவே அமைந்தது. விளையாடிய 14 லீக் போட்டிகளில், வெறும் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தொடரின் பாதி போட்டிகளில் இருந்து விலகினார். இதனால் தோனி மீண்டும் கேப்டன்சி பொறுப்பை ஏற்றாலும், அணியை சரிவிலிருந்து மீட்க முடியவில்லை. மெகா ஏலத்தில் எடுத்த வீரர்களின் சொதப்பலும் இந்த படுதோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் சென்னை அணியில் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
யார் யாருக்கு வாய்ப்பு?
இந்த ஆண்டு விளையாடிய மோசமான சீசனிலும் சில வீரர்கள் சிறப்பாக விளையாடி உள்ளனர். தொடரின் இடையில் மாற்று வீரர்களாக களமிறங்கிய இளம் வீரர்கள் டெவால்ட் பிரெவிஸ் மற்றும் ஆயுஷ் மத்ரே ஆகியோர், தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சில போட்டிகளில் வெற்றியை பெற்றுத்தந்தனர். எனவே, அவர்கள் இருவரும் நிச்சயமாக அணியில் தக்கவைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, டெவான் கான்வே மற்றும் விஜய் சங்கர் போன்ற வீரர்கள், ஏலத்திற்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த அதிரடி மாற்றங்களின் மூலம், ஒரு புதிய, இளம் மற்றும் ஆற்றல் நிறைந்த அணியை கட்டமைக்க தோனி மற்றும் ருதுராஜ் தலைமையிலான நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. தற்போதைக்கு தோனி மற்றும் ருதுராஜ் ஆகியோரின் தலைமையில், ஐபிஎல் 2026-க்கான அடித்தளம் வலுவாக அமைக்கப்பட்டு வருகிறது. தோனி விரைவில் ஓய்வை அறிவிக்க உள்ள நிலையில், இது சிஎஸ்கே-வின் வெற்றி பாதைக்கான ஒரு புதிய தொடக்கமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.