புதுடெல்லி,
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 22-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நலக் காரணங்களைக் காட்டி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்திருந்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே தன்கர் திடீரென ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பதவியை ராஜினாமா செய்த பின்னர் தன்கர் குறித்த எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில், ஜெகதீப் தன்கர் எங்கு உள்ளார் எனத் தெரியவில்லை என மாநிலங்களவை எம்.பி கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: “ஜூலை 22-ம் தேதி ஜெகதீப் தன்கர் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவியை ராஜினாமா செய்ததிலிருந்து தற்போது வரை அவர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலும் இல்லை. அவரது அரசியல் நண்பர்களாலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ‘லாப்டா லேடீஸ்’ (திருமணமான பின் மாயமான புதுமணப் பெண் குறித்த பாலிவுட் திரைப்படம்) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால், மாயமான துணை ஜனாதிபதி குறித்து இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும்? ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமா? அவர் இருக்கும் இடம் உள்துறை அமைச்சகத்துக்குத் தெரியும். அவரது உடல்நலம் சரியில்லாததால், அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து அமைச்சர் அமித் ஷா அறிக்கை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.