மும்பை,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷியாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதுகுறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) தலைவர் சரத்பவார், “இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பது ஒரு அழுத்தம் தரும் தந்திரம். நாட்டின் நலன்களை பாதுகாக்க இந்திய மக்களாகிய நாம் அரசை ஆதரிக்க வேண்டும்.
பிரதமர் மோடி அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்துவிட்டதா என்று யூகிக்க விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கைகளை அவரது முதல் ஆட்சியிலும் பார்த்தோம். அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று நான் நினைக்கிறேன். அவர் தனது மனதில் தோன்றுவதையெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்.
தற்போது நமது அண்டை நாடுகளுடன் நமக்கு இடைவெளி ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் நமக்கு எதிராக உள்ளது. நேபாளம், வங்கதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு நம்முடன் சுமுகமான உறவு இல்லை. நமது அண்டை நாடுகள் நம்மை விட்டு விலகி செல்கின்றன. இந்த பிரச்சினையை புறக்கணிக்க கூடாது. அவர்களுடன் உறவுகளை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.