பெங்களூரு; 3 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பெங்களூரு,

பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் இன்று காலை வந்தடைந்த நிலையில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், நேராக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்த அவர், 3 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். பெங்களூரு- பெலகாவி, அமிர்தசரஸ் – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) – புனே ஆகிய வழித்தடங்களில் இந்த ரெயில்கள் இயக்கப்படும்

இதேபோல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் தொடங்கி வைத்தார். விழாவில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதையிலும், சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதையிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பசுமை நிறப்பாதையில் உள்ள ஆர்.வி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. இது டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் பாதை ஆகும். இந்த மஞ்சள் நிறப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி பச்சை கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்துள்ளார்.

இதன்பின்னர், ஆர்.வி. சாலை (ராகிகுட்டா) முதல் எலெக்ட்ரானிக் சிட்டி வரையிலான மஞ்சள் வழித்தட மெட்ரோ ரெயிலின் உள்ளே சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். ரெயிலில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பயணித்தனர். அப்போது, ரெயிலில் அமர்ந்திருந்த மாணவ மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடினார். இதேபோன்று, ரெயிலில் பயணித்த பொதுமக்களுடனும் அவர் உரையாடினார்.

அதன் பிறகு அவர் ஜே.பி.நகர் 4-வது பிளாக்கில் இருந்து கடபுகெரே வரையிலான 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி பிற்பகல் 3 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.