வாஷிங்டன்,
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டது. அதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆன் மெக்லைன், நிக்கோல் அயர்ஸ், ஜப்பானின் டகுயா ஒனிஷி மற்றும் ரஷிய விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் இருந்தனர்.
இவர்கள் சுனிதா வில்லியம்ஸ் இருந்த க்ரூஸ்-9 குழுவை விடுவிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர். க்ரூஸ்-10 திட்டத்தின் கீழ் சென்ற அவர்கள் கடந்த 5 மாதங்களாக அங்கு தங்கி இருந்தனர். அப்போது மனிதர்களின் உடலியல், உளவியல் மாற்றம் உள்பட 200-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து அவர்களை பூமிக்கு கொண்டு வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு செய்தது.
அதன்படி பூமி திரும்பிய இந்த குழு அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பகுதியில் பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினர். இதனை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நேரலையாக ஒளிபரப்பியது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.