புதுடெல்லி,
மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு தரவுகளுடன் குற்றம் சாட்டியிருந்தார். பாஜகவுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலிருந்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். சுமார் 25 கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பேரணியாகப் புறப்பட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், தடுப்புகள் மீது ஏறிச் செல்ல அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த எம்.பிக்களை கைது செய்த போலீசார் பேருந்தில் அழைத்து சென்றனர். எம்.பிக்களின் இந்த பேரணி இன்று டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு போலியானது என்று பாஜக கூறியுள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான தர்மேந்திர பிரதான் கூறியதாவது; – வாக்கு திருட்டு என்பது தவறானது. ராகுல் காந்தியின் வாக்கு வங்கி அரசியல் அம்பலமாகியுள்ளது” என்றார். அதேபோல, பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத் கூறும் போது, “ எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு எதாவது வலு உள்ளதா? தனி நபரோ , கட்சியோ இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை என்று எதிர்க்கட்சி விளக்கம் அளித்துள்ளது” என்று கூறினார்.