ஆசிய கோப்பை 2025: இந்த 3 வீரர்கள் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஒரு மாதம் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. அடுத்ததாக செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தொடங்கவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்காக இந்திய அணி தயார் ஆகி வருகிறது. இதற்கான அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சில வீரர்கள் நீக்கப்படலாம் என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. சுப்மன் கில் டி20 அணியின் துணை கேப்டனாக செயல்பட உள்ளார் என்றும், அணியின் கட்டமைப்பை சமநிலைப்படுத்த சிறப்பாக செயல்பட்ட சில முக்கிய வீரர்கள் கூட அணியில் இருந்து நீக்கப்படலாம் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பையில் இருந்து நீக்கப்பட உள்ள வீரர்களை பற்றி பார்ப்போம்.

அபிஷேக் ஷர்மா

தற்போதைய ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரராக இருப்பவர் அபிஷேக் ஷர்மா. பவர்பிளே ஓவர்களில் எதிரணியின் பந்துவீச்சை சிதறடிக்கும் இவரது அதிரடியான ஆட்டம், இந்திய அணிக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது. இதுவரை அபிஷேக் சர்மா, 17 சர்வதேச டி20 போட்டிகளில், இரண்டு சதங்கள் உட்பட 193.8 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் 535 ரன்களை குவித்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு வீரரை நீக்குவது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. ஆனால், சுப்மன் கில் மீண்டும் அணிக்கு திரும்பி டாப்-ஆர்டரில் களமிறங்கும்போது, ஒரு வீரரை குறைத்தே ஆக வேண்டும். அந்த நெருக்கடியில் தேர்வாளர்கள் இந்த முடிவை எடுக்க நேரிடலாம்.

ரிங்கு சிங்

இந்திய அணியின் ‘ஃபினிஷர்’ ஆக வலம் வந்த ரிங்கு சிங்கின் சமீபத்திய ஃபார்ம், கவலைக்குரியதாக உள்ளது. கடந்த 13 சர்வதேச டி20 போட்டிகளில், வெறும் 16.25 என்ற சராசரியில் 130 ரன்களை மட்டுமே அவர் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரிலும் அவரது அதிரடி பேட்டிங் குறைந்துள்ளது. ஒருவேளை, தேர்வாளர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரையும் அணியில் தக்கவைத்து கொண்டு, சுப்மன் கில்லுக்கும் இடம் கொடுக்க விரும்பினால், அந்த தியாகத்தை செய்ய வேண்டிய வீரராக ரிங்கு சிங் இருக்கக்கூடும். இது, அணியின் மிடில்-ஆர்டர் கட்டமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வரும் என்றாலும், தற்போதைய டாப்-ஆர்டரை மாற்றுவதை விட இது எளிதான முடிவாக இருக்கலாம்.

முகமது ஷமி

அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். ஆனால், ஐபிஎல் 2025 தொடரில் அவரது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்ததால், ஆசிய கோப்பைக்கான அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகியுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியாகாத நிலையில், மற்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்தும் தேர்வாளர்கள் ஆலோசித்து வருவதால், முகமது ஷமி நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த அதிரடி மாற்றங்களுக்கு முக்கிய காரணம் ஆசிய கோப்பையை எப்படியாவது வென்றாக வேண்டும் என்று தான். இருப்பினும் சில முக்கிய வீரர்களுக்கு அணியில் இடம் இல்லாமல் போனது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.