ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டு சிறப்பு வெளியீடு: ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டை முன்னிட்டு, இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடான ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார்.

இந்து தமிழ் திசை பதிப்பகம் சார்பில் பெரியார், ராஜாஜி, அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் குறித்து சிறப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘அறவாழ்வின் அடையாளம்’ என்ற நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்து தமிழ் திசை நாளிதழின் ஆசிரியர் வி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் நூலின் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி, இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் பொறுப்பாசிரியர் வி.தேவதாசன், தலைமை நிருபர் கி.கணேஷ், விற்பனை மேலாளர் எஸ்.இன்பராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், ஆர்.நல்லகண்ணு மற்றும் அவரது குடும்ப உறப்பினர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

மேலும், மூத்த பத்திரிகையாளர்கள் சாய்நாத், ப.திருமாவேலன், பேராசிரியர்கள் ஆ.சிவசுப்பிரமணியன், பொன்னீலன், அ.கா.பெருமாள், வீ.அரசு, இரா.காமராசு, கவிஞர் யுகபாரதி மற்றும் பல்வேறு துறை ஆளுமைகள் கூறியுள்ள நல்லகண்ணு தொடர்பான அரிய தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

மொத்தம் 480 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ.500. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு 20 சதவீதம் கழிவுடன் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூலின் விலையான ரூ.500க்கு பதில் ரூ.400 மட்டும் செலுத்தி நூலைப் பெற்றுக் கொள்ளலாம். தபால் செலவை பதிப்பகம் ஏற்றுக்கொள்ளும்.

இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் store.hindutamil.in/publications என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்யலாம். மேலும், இந்தியாவுக்குள் நூல்களை அஞ்சல் அல்லது கூரியர் மூலம் பெறுவதற்கு, ‘KSL MEDIA LIMITED’ என்ற பெயரில் டிடி, மணியார்டர் அல்லது காசோலையை, ‘இந்து தமிழ் திசை நாளிதழ், கஸ்தூரி மையம், 124.வாலாஜா சாலை, சென்னை – 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். புத்தகத்தை பெற முகவரி மற்றும் கைபேசி எண்ணை அவசியம் குறி்ப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 74012996562, 7401329402 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.