புதுடெல்லி: ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “அரசியல் சாசனத்தை நாங்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது அரசியலமைப்பின் அடிப்படை. ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதிப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறி இருக்கிறார்கள். நாங்கள் அரசியலமைப்பை பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து அதைச் செய்வோம்” என்றார்.
மேலும், “பெங்களூரு மட்டுமல்ல, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கும் இது தெரியும். முன்பு ஆதாரங்கள் இல்லாமல் இருந்தது. தற்போது எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் தற்போது டீசர் மட்டும்தான் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சில ‘மெயின் பிக்சர்’கள் இன்னும் உள்ளன. அவை விரைவில் வெளிவரும்.
இந்தப் போராட்டம் என்பது அரசியல் கிடையாது. அரசியலமைப்பை காப்பாற்றவே இந்தப் போராட்டம். ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்பதை நிலைநாட்டவே இந்த போராட்டம். அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்தும்போது ஒரு முறைக்கு இரண்டு முறை யோசியுங்கள். நீங்கள் செய்த தவறை நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலையும், வாக்குச்சாவடியில் வெளியான வீடியோ பதிவையும் தர முடியாமல் மறைந்து கொள்ள முடியாது” என்றார் ராகுல் காந்தி.
முன்னதாக, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட சில எம்பிக்கள் மின்டா தேவி (Minta Devi) என்ற பெயர் பொறிக்கப்பட்ட டி ஷர்ட்களை அணிந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். இது குறித்த முழு விவரம் > நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்: டி ஷர்ட்டில் இடம்பெற்ற ‘மின்டா தேவி’ யார்?