நடைபயிற்சி சென்ற நபரின் எதிரில் திடீரென வந்த சிங்கம்; அடுத்து திக் திக் நிமிடங்கள்… வைரலான வீடியோ

ஜுனாகத்,

குஜராத்தின் ஜுனாகத் நகரில் சிமெண்ட் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதில் வேலை செய்து வரும் பணியாளர் ஒருவர் இரவு வேளையில் காற்று வாங்குவதற்காக நடைபயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். அப்படியே, சிறுநீர் கழிப்பதற்காகவும் அவர் சென்றுள்ளார். கைகளை பின்னால் கட்டியபடி மெதுவாக நடந்து சென்றபோது, தூரத்தில் நாய்கள் குரைத்தபடி இருந்துள்ளன.

பொதுவாக, ஏதேனும் தீங்கு நேரப்போகிறது என்றால் அதனை தெரிவிப்பதற்காக இதுபோன்று நாய்கள் குரைப்பது வழக்கம். ஆனால், நாய்கள் குரைத்தபோதும் அந்த நபர் அதனை லட்சியம் செய்யாமல், என்ன அவசரமோ அதற்காக சென்றுள்ளார். வீடு ஒன்றை கடந்து சென்று, அதன் முனை பகுதிக்கு சென்றபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவரை போலவே சிங்கம் ஒன்றும் அந்த வழியே வந்திருக்கிறது. இருவரும் எதிர் பகுதிகளில் இருந்து நடந்து வந்தபோது, நடுவில் இருந்த வீடு அவர்கள் ஒருவரையொருவர் பார்க்க முடியாதபடி மறைத்து விட்டது. சரியாக, வீட்டின் மறைவை கடந்து தெருமுனைக்கு அவர் சென்று அவசரத்துக்கு ஒதுங்கலாம் என நினைத்தபோது, அந்த நபரும், சிங்கமும் நேருக்கு நேராக சந்தித்து கொண்டனர்.

அந்த நபர் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அவருக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்ன செய்வது? என யோசிப்பதற்கு முன், ஆச்சரியம் ஏற்படும் வகையில் அந்த சம்பவம் நடந்தது. சிங்கமும், நபரும் வந்த வழியிலேயே திரும்பி ஓட்டம் எடுத்தனர். இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். அவர்களில் பலரும் சிங்கம் செய்த செயலை கண்டு திகைத்து போயுள்ளனர்.

அதில் ஒருவர், நாய்கள் முன்னெச்சரிக்கையாக குரைத்தபோதும் அந்த நபர் அதனை எச்சரிக்கையாக எடுத்து கொள்ளவில்லை. இது ஒரு வாழ்க்கை பாடம். இரவில் ஆச்சரியப்படும் வகையில் நாய்கள் எச்சரிக்கைக்கான அழைப்புகளை வெளிப்படுத்தும். அதுவும் சிறுத்தைப்புலி ஊருக்குள் வரும்போது, குரைத்து எச்சரிக்கை ஏற்படுத்தும்.

அப்போது சுற்றி நடக்கும் விசயங்களை பற்றி ஒருவர் கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். இதேபோன்று மற்றொருவர் பதிவிட்ட செய்தியில், 100 மீட்டர் தொலைவுக்கு ஓடி சென்ற பின்னர் நின்று, நான் ஒரு சிங்கம். நான் ஏன் பயத்தில் ஓடுகிறேன் என அந்த சிங்கம் நினைத்திருக்கும் என தெரிவித்து உள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.