இந்தியா மற்றும் சீனா அரசியல் விரிசல்களை சரிசெய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கின்றன. இதன் விளைவாக அடுத்தமாதமே இரு நாட்டுக்கும் இடையில் நேரடியான விமானப்போக்குவரத்து தொடங்கப்படலாம் என ப்ளூம்பெர்க் தளம் கூறுகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா சீனா இடையே நேரடி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் எல்லைப் பதட்டம் உள்ளிட்ட காரணங்களால் இந்த தடை நீட்டிக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகள் கழித்து இது முடிவுக்கு வரவுள்ளது.

தற்போது சீனா செல்பவர்கள் ஹாங் காங் அல்லது சிங்கப்பூரில் விமானம் மாறி செல்ல வேண்டியிருக்கிறது.
இந்திய அரசு விரைவாக சீனாவுக்கான நேரடி விமானங்களை தயார்படுத்துமாறு விமான நிறுவனங்களை அறிவுறுத்தியிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் இறுதியில் சீனாவில் நடைபெறவுள்ள ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்குள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சீ ஜின்பிங் சந்தித்துக்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு அபாயத்தைச் சந்தித்திருக்கும் சூழலில் சீனாவுடனான அரசியல் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மீது 25% வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25% அபராதமும் விதித்திருக்கிறார்.
சீனாவின் மீது விதித்த 145% வரிவிதிப்பை கடந்த மே மாதம் 90 நாள்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைத்த ட்ரம்ப், ஆகஸ்ட் 11ம் தேதி இன்னும் 90 நாள்களில் சீனா உடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து அதிகம் எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு ட்ரம்ப்பால் கராறாக வரி விதிக்க முடியவில்லை என்பது சர்வதேச அரசியல் வட்டத்தில் பேச்சுபொருளாகியிருக்கிறது.