சீனப் பொருட்கள் மீதான 145% வரி விதிப்பு மேலும் 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: சீனப் பொருட்கள் மீதான வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 30 சதவீதம் வரி விதித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் வரியை உயர்த்தியது.

இதையடுத்து சீனாவுக்கு 145 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். இதனால் இரு நாடுகள் இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் கடந்த மே மாதம் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் இரு நாடு களும் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு ஏதுவாக வரிவிதிப்பை பரஸ்பரம் 90 நாட்கள் நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டன.

அப்போது சீனா மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு டொனால்டு ட்ரம்ப் நிறுத்தி வைத்தார். இரு நாட்டுப் பிரதிநிதிகளும் கடந்த ஜூலை மாத இறுதியில் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மீண்டும் சந்தித்தனர். என்றாலும் அப்போது இரு நாடுகள் இடையே உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் 90 நாள் கெடு திங்கட்கிழமை முடிவடைவதற்கு சில மணி நேரத்துக்கு முன், சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில், ‘‘சீனா மீதான வரிவிதிப்பை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் சற்றுமுன் கையெழுத்திட்டுள்ளேன்’’ என்று கூறியுள்ளார். இரு நாடுகளில் பரஸ்பர வரிவிதிப்பை தள்ளி வைக்கும் சூழலில் சீனப் பொருட்கள் மீதான வரிவிதிப்பு 30 சதவீதம் ஆகவும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிவதிப்பு 10 சதவீதமாகவும் இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.