தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரியில் திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற மாணவர் மெக்கானிக்கல் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், அவரது நண்பருடன் ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்குச் சென்றுள்ளார்.

அவரது நண்பர் திருவிழாக்களில் வானவேடிக்கைக்காக நாட்டுவெடி செய்து திருவிழாக்களில் வெடிக்கும் தொழில் செய்து வருகிறார். அப்போது அவரது நண்பர் பயன்படுத்தும் திரியுடன் கூடிய ஒரு நாட்டுவெடியை வெங்கடேஷ் எடுத்து வந்துள்ளார்.
இதனை வெங்கடேஷ் ஒரு பையில் வைத்திருந்தார். வழக்கம்போல் கல்லூரிக்கு வரும்போது நாட்டுவெடியை புத்தகங்கள் இருந்த பைக்குள் வைத்திருந்தார். இதனைச் சக மாணவர் ஒருவர் பார்த்துக் கேட்க, பையை யாரும் தொட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
ஆனால், சக நண்பர்களான மாதவன், முரளி கார்த்திக் ஆகியோர் பையில் இருந்த நாட்டுவெடியை எடுத்து கையில் வைத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்கள் நாட்டுவெடியின் திரியை இழுத்துள்ளனர்.
அடுத்த நொடியே எதிர்பாராத விதமாக அந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில், மாதவனின் வலது கையிலும், முரளி கார்த்திக்கின் கண் பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்த ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததாகத் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ”பாலிடெக்னிக்கில் சோதனை செய்ததில் மாணவர் கொண்டு வந்தது பட்டாசுதான். அதனால் தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் கூறியுள்ளார்.