போராடும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு: தமிழிசையை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வீட்டில் இருந்து புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை போலீஸார் வீட்டிலேயே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டக்காரர்களை சந்தித்ததாக தமிழிசை மீது சென்னை காவல் துறை வழக்கும் பதிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வெளியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக சார்பில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க, போராட்டம் நடைபெறும் இடத்துக்கு இன்று மாலை நேரில் செல்ல இருந்தார். இதற்காக, மாலை 5 மணி அளவில், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டபோது, போலீஸார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும், போராட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்ல தங்களுக்கு அனுமதி இல்லை என்றும், வீட்டிலேயே இருக்குமாறும் அவரிடம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது, ‘என்னை வீட்டில் இருந்து வெளியே செல்ல கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. என்னை யாரும் தடுக்காதீர்கள்,’ என கூறி போலீஸாருடன் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதனால், தமிழிசை வீட்டின் அருகே சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக் களத்துக்கு செல்ல தமிழிசை உறுதியாக இருந்ததால், போலீஸாரால் அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதையடுத்து, காரில் புறப்பட்ட தமிழிசை, ரிப்பன் மாளிகை சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழிசை கூறும்போது, “தூய்மை பணியாளர்களை தாயுமானவர் காப்பாற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் வேலைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக, அவர்களுக்கான உதவியை தமிழக அரசு செய்ய வேண்டும்” என்றார்.

இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டக்காரர்களை சந்தித்ததாக தமிழிசை மீது சென்னை காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழிசையை வீட்டில் போலீஸார் தடுத்து நிறுத்தியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசை சவுந்தராஜனை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற திமுக அரசின் அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொதுமக்களின் நலனுக்காகப் போராடும் அரசியல் கட்சி தலைவர்களை திமுக அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை” என்று நயினார் தெரிவித்துள்ளார்.

*மெட்ரோவில் பயணித்த தமிழிசை*: போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு வந்த தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்தித்துவிட்டு, பிறகு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது, ரிப்பன் மாளிகை அருகே ஈவெரா சாலையில் கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழிசை சவுந்தரராஜன் திடீரென சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோவில் ரயிலில் ஏறி வீட்டுக்கு சென்றார். மெட்ரோ ரயிலில் பயணித்த பொதுமக்கள், தமிழிசையை கண்டதும் அவருடன் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.