‘இறந்துபோன செல்லப்பிராணிகளிடம் பேச வேண்டுமா..?’ சீனாவில் நூதன மோசடி

பீஜிங்,

வீடுகளில் அன்பாக வளர்க்கப்படும் நாய், பூனை, பறவைகள், மீன்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் பெரும்பாலும் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் திடீரென உயிரிழக்கும்போது, அதன் உரிமையாளர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகிவிடுகின்றனர்.

அவ்வாறு துயரத்தில் வாடும் உரிமையாளர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் ஒன்று சீனாவில் இயங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் இதற்காக பல்வேறு குழுக்களை நடத்தி வருவதாக கூறப்பட்டுகிறது.

இதன்படி, செல்லப்பிராணிகளை இழந்து வாடும் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு பேசும் மோசடிக்காரர்கள், “இறந்துபோன செல்லப்பிராணிகளின் ஆன்மாவிடம் பேசி 5 கேள்விகள் கேட்க வேண்டுமா? அதற்கு 128 யுவான்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) செலவாகும்” என்று கூறுகின்றனர்.

இதே போல், இறந்துபோன செல்லப்பிராணிகளிடம் 6 மாதங்கள் வரை பேச வேண்டும் என்றால், அதற்கு 2,999 யுவான்(சுமார் ரூ.36,800), இறந்துபோன செல்லப்பிராணி மறுபிறவி எடுத்துள்ளதா? என்பதை கண்டறிய 1,899 யுவான்(சுமார் ரூ.22,800) வரை வசூல் செய்கின்றனர். தங்கள் செல்லப்பிராணிகளிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று ஏக்கத்தில் இருக்கும் உரிமையாளர்கள் பலர், இந்த மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.

இந்த மோசடிக்காரர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் வெளியிட்ட பதிவுகளை பார்த்துவிட்டு, அந்த தகவல்களை சேகரித்துக் கொள்கின்றனர். பின்னர் உரிமையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்றவாறு பதில்களை தயாரித்து, செல்லப்பிராணிகள் பதிலளிப்பது போல் சித்தரிக்கின்றனர். இதனை மோசடி என்று உணர்ந்த சிலர், காவல்துறையினரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் சீனாவின் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.