ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு: 44 பேர் உயிரிழப்பு, 200 பேரை காணவில்லை

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் நகரில் உள்ள சோசிட்டி கிராமத்தில் இந்த மிகப்பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள மாதா சண்டி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் இந்த மேகவெடிப்பு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் காணாமல் போன 200 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட 1,200 பேர் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த பேரழிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கமளித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். “ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் மேக வெடிப்பு மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது பிரார்த்தனைகள் உள்ளன. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, காவல்துறை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.