டெல்லி,
நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று முன் தினம் நடந்த விசாரணையின்போது, தெருநாய்கள் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் என அனைத்து தரப்பினரையும் குறிவைக்கின்றன. தெருநாய் கடியால் பச்சிளம் குழந்தைகள் உள்பட பலருக்கும் ரேபிஸ் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், தலைநகர் டெல்லியில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்.
தற்போதைக்கு அடுத்த 8 வாரங்களுக்குள் 5 ஆயிரம் தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதற்காக டெல்லி யூனியன் பிரதேச நிர்வாகம் உடனடியாக தெருநாய்களை அடைத்து வைப்பதற்கான காப்பகங்களை அதிகரிக்க வேண்டும். தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும்,அதிகாரிகள் தெருநாய்களை பிடிப்பதற்கு எதிராக தனிநபர்களோ, அமைப்புகளோ குறுக்கே வந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை விலங்குகள் நல ஆர்வளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தெருநாய்கள் தொடர்பாக 2 நீதிபதிகள் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நல ஆர்வலர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனு நாளை காலை விசாரணைக்கு வர உள்ளது.