Jasprit Bumrah: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது 2025-ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை டி20 தொடரில் விளையாடுவாரா என்பதே பெரும் கேள்வி ஆகி இருக்கிறது. இவர் கடந்த காலங்களில் பலவீனங்கள் மற்றும் பணிச்சுமை காரணமாக அதிக போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுக்கவும் செய்தவர். எனினும், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் படி அவர் அடுத்த மாதம் செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக விளையாட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிய கோப்பையில் பும்ரா
பும்ரா அணியில் முழு போட்டிகளில் பங்கேற்காமல், பணிச்சுமையை குறைத்து நிர்வாகத்தின் ஆலோசனைப்படி சில போட்டிகளில் மட்டும் பங்கு பெறு வாய்ப்புள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். கடைசியாக 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விளையாடிய அவர், அதன் பிறகு டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இப்போது இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் சரியான முறையில் கம்பேக் செய்து, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்திய அணியின் தேர்வு அதிகாரிகள் பும்ரா மற்றும் மற்ற வீரர்களின் சுகாதார நிலையும், பணிச்சுமையும் கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்கின்றனர். பும்ரா ஆசிய கோப்பை தொடரில் விளையாடினால், அதற்குப் பிறகு நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கு ஓய்வளித்து 2வது போட்டியில் பும்ராவை விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிடும் என கூறப்படுகிறது. அப்படி செய்யும் பட்சத்தில் அது பும்ரா உடல் நலத்தையும், வலுவான செயல்பாட்டையும் பராமரிக்க உதவும்.
செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கும் இந்த 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்ளும். தொடர்ந்து பாகிஸ்தான், ஓமானை எதிர்கொள்ளும் முக்கிய போட்டிகள் உள்ளன. இந்த தொடரில் பும்ரா போன்ற நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் வெற்றிக்கான முக்கிய அஸ்திரமாக உள்ளனர். மேலும், எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் போன்ற முக்கிய போட்டிகளில் பும்ரா விளையாடுவாரா என்பது அடுத்த சில வாரங்களில் தெளிவாகும்.
About the Author
R Balaji