புதுடெல்லி,
பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேஷ் கெலாட். மேற்கு டெல்லிக்கு உட்பட்ட மதியாலா தொகுதிக்கான முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 60.
அவருடைய மறைவு செய்தியை பற்றி அறிந்ததும் மருத்துவமனை மற்றும் அவருடைய வீட்டுக்கு ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் குவிந்தனர்.
டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா, மேற்கு டெல்லி எம்.பி. கமல்ஜீத் ஷெராவத், டெல்லி அரசின் மந்திரி பர்வேஷ் சாஹிப் சிங் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்றனர்.
பா.ஜ.க.வின் கொள்கை மற்றும் தேசியவாதம் ஆகியவற்றை மேற்கு டெல்லியில் பரப்புவதில் கெலாட் முக்கிய பங்காற்றினார். துவாரகாவில் பெரிய அளவில் ராமலீலா நிகழ்ச்சியையும் அவர் தொடங்கினார். அதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.
அவருடைய இறுதி சடங்கு நவாடா பகுதியில் நாளை நடைபெறும் என டெல்லி பா.ஜ.க. வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.