புதுடெல்லி,
டெல்லியில் பெய்து வரும் பருவமழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். இதில், டெல்லியின் கல்காஜி பகுதியில் மழையால் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனால், வெள்ள நீரில் வாகனங்கள் சிரமப்பட்டு சென்று கொண்டிருந்தன. அப்போது, பராஸ் சவுக் பகுதியருகே, எச்.டி.எப்.சி. வங்கியருகே, பழமையான பெரிய வேப்ப மரம் ஒன்று வாகனங்களின் மீது நேற்று விழுந்தது.
இந்த சம்பவத்தில், பைக்கில் சென்று கொண்டிருந்த தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்தனர். அவர்களில் சுதீர் குமார் (வயது 50) என்ற அந்த நபர் உயிரிழந்து விட்டார். அவருடைய மகளான பிரியா (வயது 22) படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. பலரும் குடைகளை பிடித்தபடி பைக் மற்றும் முறிந்து விழுந்த மரத்திற்கு இடையே சிக்கியிருந்த தந்தை-மகளை மீட்க முயலும் காட்சிகள் அதில் காணப்படுகின்றன.
அவர்கள் இருவரும் துக்ளாபாத் பகுதியை சேர்ந்தவர்கள். இதில், சுதீரின் மூத்த மகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடத்த முடிவாகி இருந்த நிலையில், அதற்காக பணம் சேமித்து வந்த சூழலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியில், 9-ந்தேதி 2 சிறுமிகள் உள்பட 7 பேர், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தனர். மற்றொரு சம்பவத்தில், 2 வயது சிறுவன் திறந்திருந்த பொது சாக்கடையில் விழுந்து பலியானான். இதனால், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி, டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர்.