திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு: ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

புதுடெல்லி: ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ரஜினிகாந்த், “உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் நீண்ட காலமாக மிகவும் மதிக்கும் ஒரு தலைவரிடமிருந்து அவற்றைப் பெறுவது மிகப்பெரிய மரியாதை. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஜெய் ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக அவர்கள் அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.