தோல்வி பயத்தால் திமுக ஏராளமான திட்டங்களை அறிவித்து வருகிறது: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

தருமபுரி: தோல்வி பயத்தால் இறுதி நேரத்தில் திமுக ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி, பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையிலான பாஜக கட்சியினர் இன்று (ஆகஸ்ட் 15) தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி நகரில் இருந்து சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை பேரணியாக சென்றனர். பின்னர் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா நினைவாலயத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே பாரத மாதா நினைவாலயத்தில் அத்துமீறி நுழைந்ததாக கே.பி. ராமலிங்கம் உட்பட 11 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அனைவரும் சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். அதில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு கே.பி.ராமலிங்கம் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 79-வது சுதந்திர தினத்தையொட்டி பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்து கொண்டாடியுள்ளோம். இந்த பாரத மாதா ஆலயத்தில் பூமித் தாய் தான் கடவுளாக அமர்ந்துள்ளார். எனவே, இந்த இடம் ஆலயம் தான். ஆனால், நினைவாலயம் என பெயரிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலுக்கு பின்னர் அதை ஆலயம் என மாற்றி நிலை நாட்டுவோம். தேவைப்பட்டால் இதற்காக நீதிமன்றத்துக்கும் செல்வோம்.

நெல்லை மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவியை நான் மாணவியாகவே கருதவில்லை. பட்டமளிப்பு விழாவில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற சாதாரண நடமுறை கூட தெரியாதவர். அவரது நடவடிக்கை மூலம் ஆளுநரை அவமானப் படுத்தியதாகக் கருதிக் கொண்டு ஆளும் கட்சியும், அவர்களை சார்ந்துள்ளவர்களும் தூபம் போடு கின்றனர்.

திமுக-வும், முதல்வரும் இன்று தோல்வி பயத்தில் துவண்டு காணப்படுகின்றனர். வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமையும் என்பதை தெரிந்து கொண்டு தான் இன்று ஏராளமான திட்டங்களை அறிவித்து வருகின்றனர். அந்த திட்டங்களுக்கான பொருளாதார சூழல், கட்டமைப்பு ஆகியவை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. இந்த திட்டங்கள் அனைத்தும் ஏமாற்று வேலை.

கடந்த 4 ஆண்டுகளில் மாநில மக்களுக்கு செய்யாதவற்றை, மீதமுள்ள சில மாதங்களில் செய்வதாக வெளி வேஷம் போட்டு வருகிறார். இவையெல்லாம் தோல்வி பயத்தில் நடத்தும் நாடகங்கள். தமிழகத்தின் தீய ஆட்சியான திமுக ஆட்சியை அகற்றுவதை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம்” என்று கே.பி.ராமலிங்கம் கூறினார்.இந்நிகழ்ச்சியின் போது, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.