அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லம், உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, அவரது மகனும் பழநி எம்எல்ஏவுமான இ.பெ.செந்தில்குமார் வீடு, அவரது மகள் இந்திரா வீடு ஆகிய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று (சனிக்கிழமை) காலை 7.15 மணியளவில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டுக்கு மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வீட்டுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனையின்போது அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது வீட்டில் இருந்தார். இதே நேரத்தில் திண்டுக்கல் சீலப்பாடியில் அமைச்சரின் மகனும் பழநி தொகுதி எம்எல்ஏவுமான இ.பெ.செந்தில்குமார் வீட்டுக்கு மூன்று வாகனங்களிலும், அசோக்நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திரா வீட்டுக்கு மூன்று வாகனங்களிலும் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் வீடுகளில் சிஆர்பிஎப் போலீஸார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.

திஇ.பெ.செந்தில்குமார் வீட்டில் சோதனை | படம்: நா.தங்கரத்தினம்.

அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துவதை அறிந்த திமுகவினர், அமைச்சர் வீடு உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் திரண்டனர். திண்டுக்கல்லில் அமைச்சருக்கு தொடர்பான மூன்று இடங்களிலும் காலை 7.15 மணி முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த முறை திமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தபோது விதிமுறைகளை மீறி உளவுத்துறை போலீஸ் அதிகாரியாக இருந்த ஜாபர்சேட் மனைவிக்கு வீட்டுவசதி வாரிய இடத்தை ஒதுக்கியது தொடர்பாக உள்ள வழக்கில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.