புதுடெல்லி: முகம்மது அலி ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் பிரபு ஆகியோரே தேசப் பிரிவினைக்கு காரணம் என்று என்சிஇஆர்டி (NCERT) குறிப்பிட்டுள்ளது.
பிரிவினையின் துயரத்தை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு கல்வி, ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT ) வெளியிட்டுள்ள சிறப்பு தொகுப்பில், “இந்திய பிரிவினை தவறான கருத்துகளால் ஏற்பட்டது. இந்திய முஸ்லிம்களின் கட்சியான முஸ்லிம் லீக், 1940-ல் லாகூரில் ஒரு மாநாட்டை நடத்தியது. அதில் பேசிய அதன் தலைவர் முகம்மது அலி ஜின்னா, இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு வெவ்வேறு மத தத்துவங்கள், சமூக பழக்க வழக்கங்கள், இலக்கியங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.
இறுதியில், ஆகஸ்ட் 15, 1947-ல் இந்தியா பிரிக்கப்பட்டது. எந்த ஒரு தனி நபரும் இதற்குக் காரணமல்ல. இந்திய பிரிவினைக்கு மூன்று கூறுகள் காரணமாக இருந்தன. ஒன்று, அந்த கோரிக்கையை முன்வைத்த முகம்மது அலி ஜின்னா, இரண்டு அதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், மூன்று அதை செயல்படுத்திய மவுன்ட்பேட்டன்.
மவுன்ட்பேட்டன் ஒரு மிகப் பெரிய தவறை செய்தவர் என்பது நிரூபிக்கப்பட்டது. அதிகார மாற்றத்துக்கான தேதியை ஜூன் 1948-க்குப் பதிலாக ஆகஸ்ட் 1947 என முன்கூட்டியே நிர்ணயித்தவர் அவர். இதற்கு அனைவரையும் ஒப்புக்கொள்ளும்படி அவர் வற்புறுத்தினார். இதன் காரணமாக பிரிவினைக்கான முன்தயாரிப்புகள் முழு அளவில் மேற்கொள்ளப்படவில்லை. எல்லைகள் அவசர அவசரமாக நிர்ணயிக்கப்பட்டன. எல்லைகளை வரையறுக்க சர் சிரில் ராட்க்ளிஃப்புக்கு 5 வாரங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 15, 1947-க்கு 2 நாட்களுக்குப் பிறகும் பல லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் இந்தியாவில் இருக்கிறோமா அல்லது பாகிஸ்தானில் இருக்கிறோமா என்பதே தெரியாத நிலையில் இருந்தார்கள். இவ்வளவு அவசரம் மிகப் பெரிய கவனக் குறைவு.
ஜின்னா பிரிவினை கோரிக்கையை வலியுறுத்தினாலும், அது தனது வாழ்நாளில் நடக்கும் என அவர் கருதவில்லை. இதனை அவர் தனது உதவியாளரிடம் தெரிவித்துள்ளார். ‘இது நடக்கும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. என் வாழ்நாளில் பாகிஸ்தானைப் பார்ப்பேன் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை’ என்று அவர் தனது உதவியாளரிடம் கூறி இருக்கிறார்.
பிரிவினை ஏற்படாவிட்டால் உள்நாட்டுப் போர் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாக சென்றுவிட்டதாக சர்தார் வல்லபாய் படேல் பதிவு செய்திருக்கிறார். ‘இந்தியா ஒரு போர்க்களமாக மாறிவிட்டது. உள்நாட்டுப் போரைவிட நாட்டை பிரிப்பது நல்லது’ என்று வல்லபாய் படேல் கூறி இருக்கிறார்.
மகாத்மா காந்தி பிரிவினையை எதிர்த்தார். பிரிவினையில் தான் ஒரு கட்சியாக இருக்க முடியாது என்று காந்தி கூறினார். அதேநேரத்தில், வன்முறை காரணமாக அதனை(பிரிவினையை) தடுத்து நிறுத்தவும் அவர் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளது.