நியூயார்க்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. தொடக்கத்தில் உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், பதிலடி கொடுத்து அவற்றை உக்ரைன் மீட்டது. போரானது 3 ஆண்டுகளை நிறைவு செய்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல முறை பேசினார்.
இதனையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் (இந்திய நேரப்படி இரவு 12.30 மணியளவில்) நேரில் சந்தித்து பேச ஏற்பாடானது.
இந்த சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் தனித்தனியாக விமானத்தில் வந்து சேர்ந்தனர். அப்போது, புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது புதினை நோக்கி, பொதுமக்கள் படுகொலையை நிறுத்துவீர்களா? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு புதின், சரியாக கேட்கவில்லை என கூறினார்.
இதன்பின்பு, இருவரும் ஆலோசனை நடைபெறும் பகுதிக்கு ஒரே காரில் ஏறி, புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.