‘மாற்றம் மட்டுமே நிலையானது!’ – இந்தியா திரும்பும் ஷுபன்ஷு சுக்லா ஆக.19-ல் பிரதமருடன் சந்திப்பு

புதுடெல்லி: வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா இன்று (ஆக.16) இந்தியா திரும்புகிறார். அவர் ஆகஸ்டு 19-ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

கடந்த ஒரு வருடமாக சர்வதேச விண்வெளி நிலையம் செல்வதற்கான ஆக்சியம் 4 பயணத்துக்காக அமெரிக்காவில் தங்கியிருந்த ஷுபன்ஷு சுக்லா இன்று இந்தியா திரும்புகிறார். அவர் வரும் ஆகஸ்டு 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர், தனது சொந்த ஊரான லக்னோவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 22-23 தேதிகளில் நடைபெறும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்களில் பங்கேற்க அவர் டெல்லிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027-ஆம் ஆண்டில் இஸ்ரோ தனது முதல் மனித விண்வெளிப் பயணத்துக்கு திட்டமிட்டுள்ள நிலையில், ஷுபன்ஷு சுக்லா தனது அனுபவங்களை நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

இந்தியா திரும்பும்போது விமானத்தில் புன்னகையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சுக்லா, “இந்தியாவுக்குத் திரும்புவதற்காக விமானத்தில் அமர்ந்திருக்கும்போது, என் இதயத்தில் கலவையான உணர்ச்சிகள் ஓடுகின்றன. இந்தப் பயணத்தின்போது கடந்த ஒரு வருடமாக எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விட்டுச் சென்றது வருத்தமாக இருந்தது. பயணத்துக்குப் பிறகு முதல் முறையாக எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நாட்டில் உள்ள அனைவரையும் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

விண்வெளி பயணத்தின்போதும், அதற்குப் பிறகும் அனைவரிடமிருந்தும் நம்பமுடியாத அன்பையும் ஆதரவையும் பெற்ற பிறகு, உங்கள் அனைவருடனும் என் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இந்தியாவுக்குத் திரும்பி வர நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விடைபெறுவது கடினம், ஆனால் நாம் வாழ்க்கையில் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். எனது கமாண்டர் பெக்கி விட்சன் அன்புடன் சொல்வது போல், ‘விண்வெளிப் பயணத்தில் ஒரே நிலையானது மாற்றம் மட்டும்தான்’. அது வாழ்க்கைக்கும் பொருந்தும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

ஷுபன்ஷு சுக்லா மற்றும் விண்வெளி வீரர் பிரசாந்த் நாயர் ஆகியோர் நேற்று (ஆகஸ்ட் 15) ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். செங்கோட்டையில் நடந்த 79-வது சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நமது குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பியுள்ளார். வரும் நாட்களில், அவர் இந்தியா திரும்புகிறார்” என்று கூறியிருந்தார்.

ஜூன் 25 அன்று அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து புறப்பட்ட ‘அக்சியம்-4’ திட்டத்தின் கீழ் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஷுபன்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த பெகி விட்சன், போலந்தைச் சேர்ந்த ஸ்வாவோஸ் உஸ்னைஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோர் ஜூன் 26 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். இவர்கள் 60-க்கும் மேற்பட்ட சோதனைகளையும், ஆய்வுப் பணிகளையும் முடித்துக்கொண்டு ஜூலை 14 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஜூலை 15-ஆம் தேதி பூமியை வந்தடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.