ஆசிய கோப்பை: ஷ்ரேயாஸ் ஐயர் வருவது உறுதி… இந்த இரண்டு வீரர்களில் ஒருவருக்கு ஆப்பு!

Asia Cup 2025, India National Cricket Team: ஆசிய கோப்பை 2025 தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்க இருக்கிறது. தொடர் தொடங்குவதற்கு இன்னும் 20 நாள்களுக்கு மேலாக உள்ள நிலையில், தற்போது முதலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் ஸ்குவாட் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இது கிரிக்கெட் வட்டாரத்தையே அதிரச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Asia Cup 2025: ஆகஸ்ட் 19இல் இந்திய அணி அறிவிப்பு 

இந்நிலையில், நாளை மறுதினம் (ஆகஸ்ட் 19) இந்திய அணியின் (Team India) ஸ்குவாடும் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்த பின்னர் அன்றே மும்பையில் தேர்வுக்குழுவின் தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளரை சந்திக்க உள்ளார். இந்த ஆசிய கோப்பை தொடர் டி20 வடிவில் நடைபெற இருப்பதால், அடுத்தாண்டு நடைபெறும் ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு இந்த தொடர் பெரிய முன்னோட்டமாக இருக்கும் எனலாம். 

Asia Cup 2025: சஞ்சு சாம்சன் vs சுப்மான் கில் – யாருக்கு வாய்ப்பு?

இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடற்தகுதியை நிரூபித்துள்ளார். எனவே அவரின் தலைமையில்தான் இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது என்பதும் ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. அதேநேரத்தில் இந்திய டெஸ்ட் அணியின் சுப்மான் கில்லும் ஸ்குவாடில் சேர்க்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் டி20 அணியில் ஓபனிங்கில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இருக்குமா?, பிளேயிங் லெவனில் கில்லுக்கும், சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்தெந்த இடத்தில் பேட்டிங் செய்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

Asia Cup 2025: ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு?

அந்த வகையில், இந்திய அணி ஸ்குவாடில் (Team India Squad) ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் கடந்த ஒரு ஆண்டாக பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி வருவதால் டி20 உலகக் கோப்பையை கருத்தில்கொண்டு இப்போதே அவரை டி20 ஸ்குவாடில் எடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது என்பதால் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடுவார் என்பதாலும் அவரை எடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. தற்போது ஆசிய கோப்பை தொடரும் துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது என்பதால் அங்கும் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இப்போதே வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

Asia Cup 2025: இந்த 2 வீரர்கள் அவுட் 

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்குவாடில் இடம்பெறுவதால், கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த ஆல்-ரவுண்டர்கள் சிவம் தூபே (Shivam Dube) அல்லது ரின்கு சிங் (Rinku Singh) ஆகியோரில் ஒருவரை நீக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இவர்கள் இருவருமே நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெரியளவிலே சோபிக்கவில்லை என்பதால் மிடில் ஆர்டரில் விளையாட ஹர்திக் பாண்டியா உடன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளிக்கலாம்.

கடந்த 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் 17 இன்னிங்ஸ்களில் 604 ரன்களை 175.07 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். அதேநேரத்தில், சிஎஸ்கேவுக்காக விளையாடிய சிவம் தூபே 14 இன்னிங்ஸ்களில் 357 ரன்களை 132.22 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். அதிகபட்சமாக 50 ரன்களையே அடித்திருந்தார். மறுபுறம், ரின்கு சிங் 11 இன்னிங்ஸில் 306 ரன்களை 153.73 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.