காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்றிரவு 11.05 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 13-ந்தேதி, ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இதேபோன்று, கடந்த 8-ந்தேதி ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இந்நிலநடுக்கமும் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இதனால், அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது. ஏனெனில், அதிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும்போது, பூமியின் மேற்பரப்புக்கு வருவதற்குள் அது ஆற்றலை இழந்து விடும்.
ஆனால், பூமியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதியில் ஏற்படும் நிலநடுக்கம் அதிக ஆற்றலுடன் நிலப்பகுதிகளை தாக்குவதற்கான சாத்தியம் உள்ளது. இதனால், கட்டிடங்களுக்கும் மக்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் ஆகும்.