குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிப்பு: 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் 

புதுடெல்லி: ​பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் (என்​டிஏ) குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாள​ராக, மகா​ராஷ்டிர ஆளுந​ரான தமிழகத்தை சேர்ந்த சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அறிவிக்​கப்​பட்​டுள்​ளார்.

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கரின் பதவிக் காலம் வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்த நிலை​யில், அவர் தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜி​னாமா செய்​தார். இந்த பதவிக்கு போட்டி இருக்​கும் பட்​சத்​தில், செப்​டம்​பர் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இந்த சூழலில், குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலுக்​கான வேட்​பாளரை தேர்வு செய்​வது தொடர்​பாக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் ஆலோ​சனை கூட்​டம் டெல்​லி​யில் சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில், வேட்​பாளரை தேர்வு செய்​யும் அதி​காரம் பிரதமர் மோடி, பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், டெல்​லி​யில் பிரதமர் மோடி தலை​மை​யில் பாஜக ஆட்​சிமன்​றக் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. பிரதமர்இல்​லத்​தில் நடை​பெற்ற இந்த கூட்​டத்​தில் பாஜக தேசிய தலை​வர் ஜே.பி.நட்​டா, மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

கூட்​டத்​துக்கு பிறகு, செய்​தி​யாளர்​களிடம் ஜே.பி. நட்டா கூறும்​போது, ‘‘குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாள​ராக சி.பி.​ரா​தாகிருஷ்ணன் போட்​டி​யிடு​வார்’’ என்று தெரி​வித்​தார். தற்​போது மகா​ராஷ்டிர ஆளுந​ராக பதவி வகிக்​கும் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் (67), தமிழகத்தை சேர்ந்​தவர். திருப்​பூரில் கடந்த 1957-ம் ஆண்டு அக்​டோபர் 20-ம் தேதி சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பிறந்​தார். 16 வயதில் ஆர்​எஸ்​எஸ் இயக்​கத்​தில் இணைந்து படிப்​படி​யாக உயர்ந்​தார்.

கடந்த 1996-ம் ஆண்​டில் தமிழக பாஜக செய​லா​ள​ராக நியமிக்​கப்​பட்​டார். கடந்த 1998, 1999-ம் ஆண்டு நடை​பெற்ற மக்​களவை தேர்​தலில் கோவை​யில் இருந்து இரு​முறை எம்​.பி.​யாக தேர்வு செய்​யப்​பட்​டார். கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலை​வ​ராக பதவி வகித்​தார். கடந்த 2023-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் ஜார்க்​கண்ட் மாநில ஆளுந​ராக நியமிக்​கப்​பட்​டார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முதல் மகா​ராஷ்டிர ஆளுந​ராக பதவி வகித்து வரு​கிறார்.

தேர்​தல் நடை​முறை​கள்: குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7-ம் தேதி தொடங்​கியது. 21-ம் தேதிக்​குள் மனுக்​களை தாக்​கல் செய்ய வேண்​டும். மனுக்​கள் பரிசீலனை 22-ம் தேதி நடை​பெறும். வேட்பு மனுக்​களை திரும்ப பெற ஆகஸ்ட் 25-ம் தேதி கடைசி நாள். ஒரு வேட்​பாளரை குறைந்​த​பட்​சம் 20 எம்​.பி.க்​கள் முன்​மொழிய வேண்​டும். மக்​களவை, மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் மட்​டுமே தேர்​தலில் வாக்​களிக்க முடி​யும். சி.பி.ராதாகிருஷ்ணன் 21-ம் தேதி வேட்​புமனுவை தாக்​கல் செய்​வார் என்று கூறப்​படு​கிறது.

இண்டியா கூட்டணி வேட்பாளர்: காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் அடங்​கிய இண்​டியா கூட்​டணி சார்​பில் குடியரசு துணைத் தலை​வர் பதவிக்கு பொது வேட்​பாளரை நிறுத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​களு​டன் காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தொடர்ந்து ஆலோ​சனை நடத்தி வரு​கிறார்.

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் அறிவிக்​கப்​பட்ட பிறகு இண்​டியா கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் தேர்வு செய்​யப்​படு​வார் என்று காங்​கிரஸ் வட்​டாரங்​கள் ஏற்​கெனவே தெரி​வித்​துள்​ளன. இதன்​படி அந்த கூட்​ட​ணி​யின் வேட்​பாளர்​ விரை​வில்​ அறிவிக்​கப்​படு​வார்​ என்​று எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

சி.பி.ஆர் வெற்றி பெறுவது உறுதி: தற்​போது மக்​களவை​யில் ஒரு எம்​.பி., மாநிலங்​களவை​யில் 5 எம்​.பி.க்​கள் இடங்​கள் காலி​யாக உள்​ளன. எனவே, வரும் தேர்​தலில் 782 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்​ளனர். தேர்​தலில் வெற்றி பெற 50 சதவீத எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை. இதன்​படி, 391 எம்​.பி.க்​களின் ஆதரவை பெறும்வேட்​பாளர், புதிய குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​படு​வார். நாடாளு​மன்​றத்​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 422 எம்​.பி.க்​களும், எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​ட​ணிக்கு 312 எம்​.பி.க்​களும் உள்​ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு பெரும்​பான்மை பலம் இருப்​ப​தால், அந்த கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் வெற்றி பெறு​வது உறு​தி​யாகி​யுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.