லக்னோ,
உத்தர பிரதேசத்தில் சட்டசபை கூட்டத்தொடரின்போது, சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்.எல்.ஏ.வான பூஜா பால், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்தும், அவரை புகழ்ந்தும் பேசினார்.
2047-ம் ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை என்ற பெயரில் அவையில் நடந்த விவாதத்தின்போது பேசிய பூஜா பால், என்னுடைய கணவரை (ராஜு பால்) கொலை செய்தது யாரென எல்லோருக்கும் தெரியும். எனக்கு நீதியை பெற்று தந்ததற்காகவும், ஒருவரும் என்னுடைய குறையை கேட்காதபோது அதனை கேட்டதற்காகவும், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.
என்னை போன்று பிரயாக்ராஜ் நகரில் பல்வேறு பெண்களுக்கும் அவர் நீதியை பெற்று தந்துள்ளார். பூஜ்ய சகிப்புதன்மை போன்ற கொள்கைகளால் ஆதிக் அகமது போன்ற குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்த மாநில மக்களும் முதல்-மந்திரியை இன்று நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள் என்றார்.
2005-ம் ஆண்டு பிரயாக்ராஜில், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வான ராஜு பால் சுட்டு கொல்லப்பட்டார். பூஜா பாலை திருமணம் செய்த சில நாட்களில் இந்த சம்பவம் நடந்தது. இதற்கு முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் என்பவர், 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என கூறி பூஜா பாலை சமாஜ்வாதி கட்சியில் இருந்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில், லக்னோ நகரில் உள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் இல்லத்தில் அவரை பூஜா பால் நேரில் சந்தித்து பேசினார். இது மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.