திருப்பூரை சேர்ந்த மகாராஷ்டிர மாநில ஆளுநரான 68 வயதான சி.பி.ராதாகிருஷ்ணன், துணை குடியரசுத்தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 1957-ம் ஆண்டு அக். 20-ம் தேதி திருப்பூரில் பிறந்தவர். தந்தை பொன்னுச்சாமி. தாய் ஜானகி அம்மாள். மனைவி சுமதி. மகன் ஹரி சஷ்டிவேல். மகள் அபிராமி. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. சி.பி.ராதாகிருஷ்ணன் குடும்பம் திருப்பூர் ஷெரீப் காலனியில் வசித்து வருகிறது. வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 1974-ம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார். 1996-ம் ஆண்டு தமிழ்நாடு பாஜக செயலாளராக இருந்தார். பாஜகவில் 1998, 1999 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். கடந்த 40-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பாஜகவில் உள்ளார்.
2004-2007-ம் ஆண்டு வரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பதவி வகித்தார். அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார். கடந்த 2004-ம் ஆண்டு ஐக்கியநாடு சபையில் உரையாற்றி உள்ளார். 2020-2022-ம் ஆண்டு வரை பாஜகவின் கேரள மாநில பொறுப்பாளராக இருந்தார். 2023-ம் ஆண்டு பிப். மாதம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2024-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநில ஆளுநராக மாற்றலனார். இந்நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் துணை குடியரசுத்தலைவர் பதவிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது தாய் ஜானகி அம்மாள், திருப்பூர் ஷெரீப் காலனி உள்ள தங்களது வீட்டில் இனிப்பு வழங்கி கொண்டாடினார். தொடர்ந்து பாஜகவினர் அவரது தாய் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தாய் ஜானகி அம்மாள் கூறும்போது, “துணை குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற இறைவன் அருள்புரிய வேண்டும். பிரதமர் மோடிக்கு நன்றி. ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பெயரை நினைத்தே, இந்த பெயரை வைத்தோம். இந்தளவு அந்த பதவிக்கே வருவார் என்று நினைக்கவில்லை. கடவுள் அருளால் இந்த நிலையை அடைந்துள்ளார்.” என்றார்.
இது தொடர்பாக திருப்பூர் மூத்த அரசியல்வாதிகள் கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்தே, கொங்கு மண்டலத்தை சேர்ந்த நபருக்கு, நாட்டின் உயரிய பதவியை பாஜக அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த தேர்தல்களில் கொங்கு மண்டலத்தை வென்றெடுக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்திருந்ததால், இந்த அறிவிப்பும் சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்குமண்டல பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்துவதாக, இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. பாஜகவின் இந்த அறிவிப்பின் மூலம் கொங்கு மண்டலம், மேலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.” என்றார்.