வேண்டப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உணவோடு கஞ்சா சட்னி சப்ளை; உத்தரப்பிரதேசத்தில் கடை உரிமையாளர் கைது

உணவில் எத்தனையோ விதமான புதிய வகைகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை உரிமையாளர்கள் கவர்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ஒரு உணவக உரிமையாளர் வாடிக்கையாளர்களை கவர சாப்பாட்டில் கஞ்சாவைக் கலந்துகொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மோகன்லால்கஞ்ச் பகுதியில் பிரமோத் என்பவர் தெருவோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகத்திற்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினர். அவர்களில் தனக்கு வேண்டப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சட்னி வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அந்த சட்னிக்காகவே அதிகமான வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினர். பிரமோத் சட்னியில் கஞ்சா கலந்து சப்ளை செய்து வந்தார்.

மாதிரி படம்

சட்னி மட்டுமல்லாது உருளைக்கிழங்கு குழம்பிலும் கஞ்சா கலந்து கொடுத்து வந்தார். இது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அந்த உணவகத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் அந்த உணவகத்தில் வழங்கப்படும் சாப்பாடு மற்றும் சட்னியில் கஞ்சா கலந்து வேண்டப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கி வந்தது தெரிய வந்தது. அதோடு தனிப்பட்ட முறையில் கஞ்சா தேவைப்படுபவர்களுக்கு தனியாக கஞ்சாவை பிரமோத் சப்ளை செய்து வந்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

பிரமோத் கைது செய்யப்பட்ட அதேநாளில் கஞ்சா கடத்தி பல்வேறு இடங்களில் சப்ளை செய்த மனிஷ், தேவ் ரவத், ஜக்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஸ்கூல் பேக்கை பயன்படுத்தி அதில் கஞ்சாவை எடுத்துச்சென்று பேருந்து நிலையம், ரயில் நிலையம், டாக்சி ஸ்டாண்ட் போன்ற மக்கள் கூடும் இடங்களில் நின்று விற்பனை செய்து வந்தனர். அவர்கள் கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக கட்டி ரூ.500 முதல் 1200 வரை விற்பனை செய்து வந்தனர். மூன்று பேரும் ஆட்டோ ரிக்‌ஷாவில் சென்றபோது போலீஸார் நடத்திய சோதனையில் அவர்களது பேக்கில் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.