சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும். சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்றத் தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக-விலிருந்து 9 உறுப்பினர்களும், அதிமுக-விலிருந்து 12 உறுப்பினர்களும், மதிமுகவில் இருந்து 2 உறுப்பினர்களும், காங்கிரஸ், எஸ்டிபிஐ தலா ஒரு உறுப்பினரும், சுயேட்சையாக 5 உறுப்பினர்கள் என மொத்தம் 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் மதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள் திமுக-வுக்கு ஆதரவளித்தனர். இந்நிலையில் கடந்த 2022 மார்ச் 4ஆம் தேதி நடந்த நகர மன்ற சேர்மன் தேர்தலில் திமுக சார்பில் உமா மகேஸ்வரி, அதிமுக சார்பில் முத்துலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த மறைமுக வாக்கெடுப்பில் இருவருமே தலா 15 வாக்குகளைப் பெற்ற நிலையில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் குலுக்கல் முறையில் சேர்மனாக உமாமகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் கண்ணன் என்ற ராஜு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பதவி ஏற்ற நாளிலிருந்து நகர்மன்ற தலைவியின் செயல்பாடுகள் சரியில்லை எனவும், கவுன்சிலர்கள் கூறும் குறைகளை செய்து தருவதில்லை எனவும் கூறி வந்தனர். இந்நிலையில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் உட்பட 24 கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தது மட்டுமல்லாது அறிவாலயத்திற்கே சென்று புகார் மனுவை அளித்தனர். அதனை அடுத்து கடந்த ஜூன் 2-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான குரல்வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 29 கவுன்சிலர்கள் பங்கேற்று வாக்குகளை செலுத்தினர். அதில் ஒரு வாக்கு மட்டுமே உமா மகேஸ்வரிக்கு கிடைத்தது. வாக்கெடுப்பில் 28 ஆதரவு வாக்குகள் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதை அடுத்து உமா மகேஸ்வரி பதவியை இழந்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தியது செல்லாது எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் உமா மகேஸ்வரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 17-ம் தேதி மறைமுக வாக்கெடுப்பு நடத்தவும், அதன் முடிவுகளை ஜூலை 18-ம் தேதி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் ஜூலை 18-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து உமா மகேஸ்வரி நகராட்சி தலைவர் பதவியை இழந்தார்.

இந்நிலையில், நகராட்சியில் காலியாக உள்ள தலைவர் பதவிக்கு இன்று நகராட்சி ஆணையாளர் சாம் கிங்ஸ்டன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் 6வது வார்டு உறுப்பினர் கவுசல்யா, அதிமுக சார்பில் 26வது வார்டு உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் ஆகியோர் போட்டியிட்டனர். முன்னாள் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி மற்றும் திமுக கவுன்சிலர் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. மீதமுள்ள 28 பேர் வாக்களித்தனர். தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் திமுக-வை சேர்ந்த கவுசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார். இதனால் சங்கரன்கோவில் நகராட்சியை மீண்டும் திமுக கைப்பற்றியுள்ளது.