சென்னை,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று முதல் அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடக்கிறது. கோஜன், குருநானக், பச்சையப்பா கல்லூரி உள்பட பல்வேறு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ‘ஏ’ பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், இமாச்சலபிரதேசம், சத்தீஷ்கார், மராட்டியமும், ‘பி’ பிரிவில் இந்தியன் ரெயில்வே, ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, பரோடாவும், ‘சி’ பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன், மும்பை, அரியானா, பெங்காலும், ‘டி’ பிரிவில் ஐதராபாத், பஞ்சாப், மத்தியபிரதேசம், ஜார்கண்டும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். லீக் ஆட்டங்கள் 3 நாட்களும், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி 4 நாட்களும் நடைபெறும்.
இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் ஆட்டங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- இமாச்சலபிரதேசம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன்- மும்பை, சத்தீஷ்கார்- மராட்டியம் ஆகிய அணிகள் மோதுகின்றன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணியின் கேப்டனாக ஷாருக்கானும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணியின் கேப்டனாக பிரதோஷ் ரஞ்சன் பாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா, ஆயுஷ் மாத்ரே, முஷீர் கான், சர்ப்ராஸ் கான் போன்ற நட்சத்திர வீரர்கள் களமிறங்குகின்றனர். இதனால் இது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.